ஓட்டுக் கட்டிடடத்தில் பள்ளிக்கூடம்; மழை தண்ணீர் ஒழுகி வகுப்பறை நிரம்பியதால் மாணவர்கள் அவதி; பெற்றோர் கோபம்...

First Published Dec 1, 2017, 6:25 AM IST
Highlights
School in the tail chamber Students are suffering from rain water packed classroom Parents are angry ...


கடலூர்

கடலூரில் உள்ள ஓட்டுக் கட்டிட பள்ளிக்கூடத்தில்  மழை நீர் ஒழுகி வகுப்பறைக்குள் தண்ணீர் தேங்கியதால் மாணவர்கள் அவதி அடைந்தனர். இதுபற்றி தகவல் அறிந்த பெற்றோர்கள் கோபத்துடன் பள்ளியை முற்றுகையிட்டனர்.

கடலூர் மாவட்டம், விருத்தாசலம் அருகே உள்ளது கவணை கிராமம். இங்கு இரண்டாயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் வசிக்கின்றனர்.

இந்தக் கிராமத்தில் கடந்த 1963–ஆம் ஆண்டு ஊராட்சி ஒன்றியத் தொடக்கப்பள்ளி ஒன்று கட்டப்பட்டது. அதில் தற்போது 50 மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர்.

ஓட்டு கட்டிடத்தில் இயங்கி வரும் இப்பள்ளிக்கூடத்தை முறையாக பராமரிக்காததால் ஓடுகள் உடைந்து காணப்படுகிறது. மழை பெய்துவிட்டால் போதும் மாணவர்கள், ஆசிரியர்கள் பெரும் அவதிக்கு உள்ளாகிறார்கள். மேலும், மழைநீர் ஒழுகுவதால் சுவர்களும் பெயர்ந்து, எப்போது வேண்டுமானாலும் விழலாம் என்ற நிலையில் உள்ளது.

இந்த நிலையில், நேற்று முன்தினம் அப்பகுதியில் கனமழை பெய்ததால் அந்தப் பள்ளியின் வகுப்பறை முழுவதும் மழைநீர் ஒழுகி தண்ணீர் தேங்கி நின்றது.

நேற்று காலையில் பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள் வகுப்பறைக்கு வந்து தண்ணீரை வெளியேற்றினர். இருந்தும் தரை ஈரமாக இருந்ததால் கல்வி பயில முடியாத நிலை ஏற்பட்டது.

இதுபற்றி தகவல் அறிந்ததும் மாணவர்களின் பெற்றோர்கள் ஒன்று திரண்டு வந்து பள்ளியை முற்றுகையிட்டனர். அப்போது பெற்றோர்கள், பள்ளிக்கூடத்திற்கு விடுமுறை விட வேண்டும், அல்லது மாற்று இடத்தில் மாணவர்களை அமர வைத்து கல்வி கற்றுக்கொடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.

அப்போது ஆசிரியர்கள், தங்களது உயர் அதிகாரியை செல்போனில் தொடர்பு கொண்டு பேசினர். அப்போது அதிகாரி, பள்ளியின் அருகில் உள்ள அங்கன்வாடி மையத்தில் பள்ளி மாணவர்களை அமர வைத்து வகுப்பு நடத்துமாறு உத்தரவிட்டார்.

இதனைத் தொடர்ந்து ஆசிரியர்கள், பெற்றோர்களிடம் பேசி அருகில் இருந்த அங்கன்வாடி மையத்திற்கு மாணவர்களை அழைத்துச்சென்று வகுப்புகள் நடத்தினர்.

இதுகுறித்து பெற்றோர்கள், "இந்தப் பள்ளியின் ஓட்டுக் கட்டிடத்தை இடித்துவிட்டு, புதிய கட்டிடம் கட்ட வேண்டும். இல்லையெனில் மாணவர்களை பள்ளிக்கு அனுப்ப மாட்டோம். மேலும், விருத்தாசலம் தொடக்கக்கல்வி அலுவலகம், கோட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்துவோம்" என்று தெரிவித்தனர்.

click me!