எங்க ஊர் பள்ளிக்கு ஆண் தலைமை ஆசிரியர்தான் வேண்டும்; பெண் வேண்டாம் - மக்கள் போராட்டம்...

First Published Jun 19, 2018, 9:15 AM IST
Highlights
school in our town must have male head master not Woman - People Struggle ......


அரியலூர்

இலையூர் மேலவெளி கிராமத்தில் உள்ள அரசு பள்ளிக்கு ஆண் தலைமை ஆசிரியர்தான் நியமிக்கப்பட வேண்டும் என்றும் பெண் தலைமை ஆசிரியை வேண்டாம் என்று பள்ளிக்கு பூட்டுப்போட்டு பொதுமக்கள் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அரியலூர் மாவட்டம், செயங்கொண்டம் அருகே இலையூர் மேலவெளி என்ற கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி ஒன்று இருக்கிறது. இந்தப் பள்ளி போன கல்வியாண்டில் ஐந்து மாணவர்களை மட்டுமே வைத்து வகுப்புகளை நடத்தி வந்தது. 

இந்த நிலையில், இந்தாண்டு பெற்றோர்கள் மற்றும் அரசு பள்ளி மீட்புக் குழு இயக்கத்தினர் அதிக மாணவர்களை  கொண்டுவந்து இந்தப் பள்ளியில் சேர்க்க வேண்டும் என்ற முயற்சியில் ஈடுபட்டனர்.  அதன் விளைவாக இவர்கள் கிராமத்தில் உள்ள ஒவ்வொரு வீடு வீடாகச் சென்று சுற்றறிக்கை கொடுத்து முதற்கட்டமாக 13 மாணவர்களை இந்தப் பள்ளியில் சேர்த்து எண்ணிக்கையை கூட்டி சாதித்தனர்.

மேலும், போன வருடம் பள்ளியில் இருந்த தலைமை ஆசிரியை சரோஜா என்பவர் ஓய்வுப் பெற்றதையடுத்து தற்போது பள்ளிக்கு தலைமை ஆசிரியர் இல்லை. இந்த நிலையில் கோரியம்பட்டி கிராமத்தில் உள்ள பள்ளி தலைமை ஆசிரியை வளர்மதி இந்தப் பள்ளிக்கும் தலைமை ஆசிரியையாக கூடுதல் பொறுப்பு வகித்து வந்தார். 

இவர் கோரியம்பட்டி பள்ளியில் சென்ற கல்வியாண்டில் இரண்டு 5-ஆம் வகுப்பு மாணவர்களை மட்டும் வைத்து இரண்டு ஆசிரியர்களுடன் பணி புரிந்து வந்தார். 

தற்போது இந்தாண்டு அந்த பள்ளியில் சுத்தமாக மாணவர் சேர்க்கை இல்லாததால் இலையூர் மேலவெளி பள்ளிக்கு தலைமை ஆசிரியை பணிக்கு வளர்மதி விண்ணப்பித்துள்ளார்.

இதனையறிந்த இலையூர் மேலவெளி பொதுமக்கள், பெற்றோர்கள் எங்கள் ஊர் பள்ளிக்கு பெண் தலைமையாசிரியையான வளர்மதி வேண்டாம் என்று கூறி மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி உள்ளிட்ட அதிகாரிகளிடம் மனு அளித்திருந்தனர். 

இதனையடுத்து வளர்மதி இலையூர் மேலவெளி பள்ளிக்கு செல்வதற்காக அதிகாரிகளை சந்திக்க சென்றார். இதனை அறிந்த அப்பகுதி பொதுமக்கள் அனைவரும் பள்ளி வளாகத்தில் ஒன்று கூடி போராட்டத்தில் ஈடுபட்டனர். 

அதன்பின்னர் பள்ளியின் கதவை பூட்டுப்போட்டு பூட்டிவிட்டு பள்ளி வளாகத்தில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். 

இதுகுறித்து தகவல் அறிந்த கிராம நிர்வாக அதிகாரி சரவணன் நிகழ்விடத்திற்கு விரைந்தார். அதன்பின்னர் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்.

அந்தப் பேச்சுவார்த்தையில் பொதுமக்களிடம், "உங்களது கோரிக்கையை மனுவாக எழுதி தாருங்கள். நான் நடவடிக்கை எடுக்கிறேன்" என்று கிராம நிர்வாக அதிகாரி கூறினார். 

அதன்படி, பொதுமக்களும் மனு எழுதி கொடுத்தனர். அந்த மனுவைப் பெற்றுக் கொண்ட கிராம நிர்வாக அதிகாரி, இதுகுறித்து கோட்டாட்சியருக்கு தகவல் தெரிவித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறினார். 

எனினும் பொதுமக்கள் அந்த இடத்தைவிட்டு செல்லாமல் அங்கேயே நின்றனர். இதனையடுத்து அங்கு வந்த செயங்கொண்டம் காவல் ஆய்வாளர் வேலுச்சாமி, காவல் உதவி ஆய்வாளர் செல்வம், ஆண்டிமடம் உதவி தொடக்க கல்வி அதிகாரி மதியழகன், வருவாய் ஆய்வாளர் திலகவதி ஆகியோர் அரசு பள்ளி மீட்புக் குழு இயக்கத்தினர் மற்றும் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அந்தப் பேச்சுவார்த்தையில், "எங்களது ஊரில் உள்ள பள்ளிக்கு ஒரு ஆண் தலைமை ஆசிரியரை நியமிக்க வேண்டும். தற்பொழுது பணியாற்றிக் கொண்டிருக்கின்ற ஆசிரியை மட்டுமே போதும்" எனவும் கோரிக்கை வைத்தனர். 

இந்தக் கோரிக்கைகளை ஏற்றுக்கொண்ட அதிகாரிகள் இதுகுறித்து நடவடிக்கை எடுப்பதாக கூறினர். அதன்பின்னரே பொதுமக்கள் மற்றும் பெற்றோர்கள் தங்களது போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து அமைதியாக கலைந்துச் சென்றனர். 

click me!