
விருதுநகர்
பல மாதங்களாக குடிநீர் இல்லாமல் வாடும் குல்லூர் சந்தை கிராம மக்கள் வெற்றுக் குடங்களுடன் விருதுநகர் ஆட்சியரை சந்தித்து நடவடிக்கை எடுக்க கோரி மனு கொடுத்தனர்.
விருதுநகரில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியரின் தலைமையில் ஆட்சியரகத்தில் நடைப்பெற்றது.
இதில் ஏராளமான மக்கள் தங்களது கோரிக்கைகள் அடங்கிய மனுவை ஆட்சியரிடம் கொடுத்தனர். அதனைப் பெற்றுக் கொண்ட ஆட்சியர் இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
அதன்படி, விருதுநகர் யூனியனில் உள்ள குல்லூர் சந்தை கிராமத்தை சேர்ந்த பெண்கள் வெற்றுக் குடங்களுடன் ஆட்சியரகம் வந்து மனு ஒன்றைக் கொடுத்தனர்.
அதில், "எங்கள் கிராமத்தில் பல மாதங்களாக குடிநீர் விநியோகம் செய்யப்படவில்லை. பஞ்சாயத்து செயலரிடம் இதைப் பற்றி முறையிட்டால் எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் உள்ளார். எனவே, எங்களுக்கு தினசரி குடிநீர் விநியோகம் செய்ய உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று கோரி இருந்தனர்.
மேலும், "மெட்டுக்குண்டு சாலையை சீரமைப்பதற்காக தோண்டி இரண்டு மாதங்களாகியும் இன்னும் பணி முடிவடையாததால் பெரும் சிரமத்தை எதிர்கொள்கிறோம். எனவே, உடனே சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றும் அவர்கள் கோரினர்.