ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகை போராட்டத்தால் திணறடித்த துப்புரவு தொழிலாளர்கள்; 80 பேர் அதிரடி கைது...

First Published Jun 19, 2018, 8:04 AM IST
Highlights
Cleaning workers siege Collector office 80 arrested


விழுப்புரம்

ஊதிய உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விழுப்புரம் ஆட்சியர் அலுவலகத்தை குடிநீர் தொட்டி இயக்குபவர்கள் மற்றும் துப்புரவு தொழிலாளர்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டதால் 80 பேர் கைது செய்யப்பட்டனர்.

விழுப்புரத்தில் குடிநீர் தொட்டி இயக்குபவர்கள் மற்றும் துப்புரவு தொழிலாளர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்தப் போராட்டத்துக்கு சி.ஐ.டி.யு. மாநில துணை செயலாளர் வீராசாமி தலைமை வகித்தார். மாவட்டத் தலைவர் குமார் முன்னிலை வகித்தார். மாநிலத் தலைவர் கிருஷ்ணமூர்த்தி சிறப்புரை ஆற்றினார். இதில் ஏராளமான குடிநீர் தொட்டி இயக்குபவர்கள் மற்றும் துப்புரவு தொழிலாளர்கள் பங்கேற்றனர். 

இந்தப் போராட்டத்தில், "ஊராட்சியில் பணிபுரியும் குடிநீர் தொட்டி இயக்குபவர்கள், துப்புரவு பணியாளர்களுக்கு 7-வது ஊதியக்குழு பரிந்துரை அடிப்படையில் ஊதிய உயர்வு வழங்க வேண்டும். 

குடிநீர் தொட்டி இயக்குபவர்களுக்கு 30 சதவீதம் ஊதிய உயர்வும், சிறப்பு காலமுறை ஊதியமும் வழங்க வேண்டும். 

மூன்று ஆண்டுகள் பணிமுடித்த தொகுப்பூதிய துப்புரவு தொழிலாளர்களை நிரந்தரமாக்கி ஊதிய உயர்வு வழங்க வேண்டும்" உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினர். 

இந்தப் போராட்டத்தில் ஈடுபட்ட 15 பெண்கள் உள்பட 80 பேரை காவலாளர்கள் கைது செய்தனர். அவர்கள் அனைவரையும் திருமண மண்டபத்தில் தங்க வைத்து பின்னர் மாலையில் விடுவித்தனர். 

இந்த முற்றுகைப் போராட்டத்தால் மாவட்ட ஆட்சியர்ம் அலுவலகமே பரப்பரப்புடன் காணப்பட்டது.

click me!