
புதிய கட்சி தொடங்குகிறார் சசிகலா புஷ்பா எம்பி…மார்ச் 26 ஆம் தேதி அறிவிப்பு
அதிமுக மாநிலங்களவை உறுப்பினர் சசிகலா புஷ்பா, கடந்த ஆண்டு அக்கட்சியிலிருந்து நீக்கப்பட்டார். ஜெயலலிதா போயஸ் கார்டனில் வைத்து தன்னை தாக்கியதாக மாநிலங்களவையில் புகார் அளித்து பரபரப்பை ஏற்படுத்தினார்.
ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு சசிகலாவுக்கு கடும் எதிர்ப்புத் தெரிவித்து வரும் சசிகலா புஷ்பா, ஜெயலலிதா மரணத்தில் மர்மம் இருப்பதாகவும்,உரிய விசாரணை நடத்தி உண்மையை வெளிக் கொண்டு வரவேண்டும் என வழக்கு தொடர்ந்துள்ளார்,
மேலும் சசிகலா அதிமுக பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டது செல்லாது என அறிவிக்க வேண்டும் என்றும் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
ஏற்கனவே அதிமுகவில் சசிகலா மற்றும் ஓபிஎஸ் ஆகியோர் தனித்தனியாக செயல்பட்டு வருகின்றனர்.
அதே நேரத்தில் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபாவும் தனிக்கட்சி தொடங்கியுள்ளார். இப்படி அதிமுக சிதறிக் கிடக்கும் நிலையில் சசிகலா புஷ்பா எம்.பி. தனிக்கட்சி தொடங்கப் போவதாக அறிவித்துள்ளார்.
திருநெல்வேலியில் காமராஜர் ஆதித்தனார் கழக நிறுவனத் தலைவர் கராத்தே செல்வின் நினைவு நாள் மார்ச் 26 அன்று நடக்க உள்ளது.
இதற்கான ஏற்பாடுகளை பாளையங்கோட்டை பெருமாள்புரத்தில் உள்ள அவரது நினைவு இடத்தில் அகில இந்திய கராத்தே செல்வின் நாடார் நற்பணி மன்றம் சார்பில் செய்து வருகின்றனர்
.இந்த நிகழ்ச்சியில் ஊர்வலமாக கலந்து கொள்ளும் சசிகலா புஷ்பா எம்பி அதே நாளில் புதிய கட்சி தொடங்க உள்ளார்.
அவரது ஆதரவாளர்கள் நெல்லை, குமரி, தூத்துக்குடி, மதுரை, விருதுநகர் உள்ளிட்ட தென் மாவட்டங்களில் இதற்காக மக்கள் சந்திப்பு நடத்தி வருகின்றனர்.
அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட எம்பி சசிகலா புஷ்பா, அதிமுக பொதுச் செயலாளர் வி.கே.சசிகலாவுக்கு எதிராக புதிய இயக்கம் தொடங்குவது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.