
ஜெயலலிதா மறைந்து விட்டார். சொத்துக் குவிப்பு வழக்கில் சசிகலாவும் இளவரசியும் பெங்களூரு சிறைக்கு சென்றுவிட்டனர்.
இதையடுத்து சசிகலா உறவினர்களும், அங்கு தங்க மறுத்ததால், போயஸ் தோட்ட இல்லத்தில் உள்ள சமையல் அறைக்கும் பூட்டு போடப்பட்டுள்ளது.
கட்சிக்காரர்கள் வருகைக்கும் தடை விதிக்கப் பட்டதால், போயஸ் கார்டன் இல்லம் வெறிச்சோடி கிடக்கிறது.
மறைந்த முதல்வர் ஜெயலலிதாவும், அவரது தாய் சந்தியாவும் சேர்ந்து வாங்கிய வீடு தான், போயஸ் கார்டனில் உள்ள வேதா நிலையம்.
சந்தியா மறைவுக்கு பின், அந்த வீடு, ஜெயலலிதா பெயரில் உள்ளது. அவரும் இறந்த பின்னர், சசிகலா தமது குடும்ப உறுப்பினர்களுடன், போயஸ் கார்டன் வீட்டில் வசித்து வந்தார்.
அதன் பின்பு, சொத்து குவிப்பு வழக்கில் சிறை தண்டனை பெற்று, பெங்களூரு சிறையில் சசிகலா அடைக்கப்பட்டு உள்ளார்.
அதையடுத்து, ஜெயலலிதா வசித்த போயஸ் கார்டன் இல்லத்தை நினைவு இல்லமாக மாற்றி, மக்களின் பார்வைக்கு விட வேண்டும் என, ஓ.பி.எஸ் உள்பட பலரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
ஆனாலும், அந்த வீடு, ஜெயலலிதாவின் ரத்த உறவு வாரிசுகளுக்கு மாற்றப்பட்டுள்ளதா? அல்லது சசிகலா குடும்பத்தினரின் பெயருக்கு மாற்றப்பட்டுள்ளதா? என்ற சர்ச்சையும் எழுந்துள்ளது.
போயஸ் கார்டன் வீடு, ஜெயலலிதாவின் தாயார் சந்தியா வாங்கியதால், , சட்டரீதியாக பேரன், பேத்திகளான தீபா மற்றும் தீபக் ஆகியோருக்கே கிடைக்க வாய்ப்புள்ளது.
ஆனால், இதுவரை, தீபா, தீபக் ஆகியோர், போயஸ் கார்டன் வீடு தங்களுக்கு சொந்தம் என, உரிமை கொண்டாடி, நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கவில்லை.
அவர்கள் ஏன் இதுவரை அப்படிப்பட்ட முயற்சியை எடுக்கவில்லை என்ற கேள்விக்கும், விடை தெரியாமல் உள்ளது.
சசிகலா, இளவரசி உள்ளிட்ட குடும்ப உறுப்பினர்கள் போயஸ் கார்டனில் தங்கியிருந்த போது, வீட்டின் சமையல் அறையின் அடுப்பு அணையாமல் எப்போதும் எரிந்து கொண்டிருக்கும்.
தற்போது, அங்கு யாரும் வராத காரணத்தால், சமையல் அறைக்கு பூட்டு போடப்பட்டுள்ளது.
அங்குள்ள ஜெயலலிதா, சசிகலா ஆகியோரின் படுக்கை அறைகளை சுத்தம் செய்வது, பூஜை அறையை பராமரிப்பது ஆகிய பணிகளில் சில ஊழியர்கள் தினமும் ஈடுபட்டு வருகின்றனர்.
கட்சிக்காரர்கள் அனைவரையும் தமது வீட்டிலோ அல்லது கட்சி அலுவலகத்திலோ தினகரன் சந்தித்து வருகிறார். அவரும் போயஸ் கார்டன் செல்வதில்லை.
தேசிய அளவில் அதிகார மையமாக கருதப்பட்ட ஜெயலலிதாவின், போயஸ் தோட்ட இல்லத்தில் தங்குவதற்கு, ஒரு காலத்தில் மன்னார்குடி உறவுகளுக்கு மத்தியில் கடும் போராட்டமே நடக்கும்.
ஆனால், தற்போது கேள்வி கேட்பதற்கே ஆள் இல்லாத நிலையில், அங்கு தங்குவதை அனைத்து உறவுகளும் தவிர்ப்பது, விடை கிடைக்காத மர்மமாகவே இருக்கிறது.
ஒருவேளை, ஜெயலலிதாவின் ஆவி அந்த வீட்டில் புகுந்து ஆட்டி படைப்பதாக, ஜோதிடர்கள் கிளப்பும் பீதி உண்மையாக இருக்குமோ? என்றும் சிலர் சந்தேகம் கிளப்பி வருகின்றனர்.