சங்கர நேத்ராலயா நிறுவனர் மற்றும் தலைவரான டாக்டர் எஸ்.எஸ்.பத்ரிநாத் தனது 83வது வயதில் இன்று காலமானார்.
சங்கர நேத்ராலயா இந்தியாவின் தொண்டு நிறுவன மருத்துவமனைகளில் ஒன்று ஆகும். டாக்டர். எஸ். எஸ். பத்ரிநாத் தான் இதன் நிறுவனர் மற்றும் தலைவர் ஆவார். கடந்த சில நாட்களாக உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு இருந்த இவர், இன்று (நவம்பர் 21) காலமானார். அவருக்கு வயது 83. இவர் பத்மபூஷன், பத்மஸ்ரீ, டாக்டர் பி சி ராய் விருது, சிவிலியன் விருது உள்ளிட்ட விருதுகளை பெற்றுள்ளார்.
டாக்டர் எஸ் எஸ் பத்ரிநாத் அமெரிக்காவில் தனது உயர் படிப்புகளை படித்து முடித்துவிட்டு இந்தியாவிற்கு வந்த இவர், குறைந்த செலவில் மக்களுக்கு சிகிச்சை அளிக்க வேண்டும் என்ற நோக்கில் தான் "சங்கர நேத்ராலயா" மருத்துவமனையைத் தொடங்கினார் இவர். இது இன்று பல கிளைகளாக வளர்ந்து பல்லாயிரக்கணக்கான மக்களுக்கு சிகிச்சை அளித்து வருகிறது. அதிலும் குறிப்பாக சென்னையில் இருக்கும் சங்கர நேத்ராலயா மருத்துவமனையில் ஏழைகளுக்கு இலவசமாக கண்புரை அறுவை சிகிச்சை செய்யப்படுகிறது. பத்ரிநாத்தின் மனைவி வசந்தி ஒரு குழந்தை நல மருத்துவர் மற்றும் ரத்த நோய் நிபுணர் ஆவார்.
இந்நிலையில் உடல் நலக்குறைவால் காலமான டாக்டர் . எஸ் . எஸ் பத்ரிநாத்துக்கு பிரதமர் மோடி, ஆளுநர் என். என். ரவி, தமிழ்நாடு முதலமைச்சர் மு .க ஸ்டாலின் உள்ளிட்டோர் பலர் தங்கள் இரங்கல் தெரிவித்தனர்.