
தமிழக காடுகளில் சந்தன மரங்கள் பயிரிட்டு மலைவாழ் மக்களின் பொருளாதாரத்தை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கூறியுள்ளார்.
வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், ஏலகிரி கோடை விழாவில் இன்று பங்கேற்றார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழக காடுகளில் சந்தன மரங்கள் பயிரிட்டு மலைவாழ் மக்களின் பொருளாதாரத்தை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார். தமிழர்கள் ஆந்திராவுக்கு சென்று செம்மரக் கடத்தலில் ஈடுபடுவதற்கு பொருளாதர நிலையே காரணம் என்று தெரிவித்தார்.
அதிமுகவின் 123 சட்டமன்ற உறுப்பினர்களும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஒரே குடும்பமாக உள்ளதாக அப்போது அவர் கூறினார்.
அதிமுக அணிகள் இணைப்பு குறித்து செய்தியாளர் ஒருவர் கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த அவர், அதிமுகவின் அணிகள் இணைப்பு கட்டாயமாக நடைபெறும் என்று தெரிவித்தார்.
குடியரசு தலைவர் தேர்தலில் யாருக்கு ஆதரவு அளிப்பது என்பது குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அறிவிப்பார் என்றும் அவர் கூறினார்.
இரட்டை இலை சின்னம் குறித்து செய்தியாளரின் கேள்விக்கு பதிலளித்த அவர், தேர்தல் ஆணையத்தில் 15 லட்சம் பிராமணப் பத்திரங்கள் தாக்கல் செய்துள்ளோம். அதனால் இரட்டை இலை சின்னம் எங்களுக்கு கிடைக்கும் என்றும் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தெரிவித்தார்.