
கரூர்
20 ஆண்டுகளாக மணல் அள்ளி வருவதால் நிலத்தடி நீர் மட்டம் அதள பாதாளத்திற்கு சென்றுவிட்டது எனவே, சிந்தலவாடி மணல் குவாரியை மூட வேண்டும் என்று கரூரில் கடைகள் அடைத்து மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கரூர் மாவட்டத்தில் மாயனூர், சிந்தலவாடி ஆகியப் பகுதிகளில் அரசு மணல் குவாரிகள் தொடங்கப்பட்டுள்ளது.
இதனால், இந்தப் பகுதிகளில் கடும் குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருவதால் அங்கு மணல் அள்ளக்கூடாது என்று எதிர்ப்புத் தெரிவித்து மாயனூர், சிந்தலவாடி பகுதிகளில் மக்கள் அடுத்தடுத்துப் போராட்டங்களில் ஈடுபட்டனர்.
இதில் சிந்தலவாடி, கள்ளப்பள்ளி பகுதிகளில் கடந்த 20 ஆண்டுகளாகத் தொடர்ந்து மணல் அள்ளப்பட்டு வருவதால் நிலத்தடி நீர்மட்டம் அதல பாதாளத்திற்குச் சென்று விட்டது.
மேலும் தற்போது கடும் குடிநீர் பஞ்சம் ஏற்பட்டுள்ளது. குடிநீர் பஞ்சத்தை போக்கும் வகையில் சிந்தலவாடியில் மணல் குவாரி அமைந்துள்ள பகுதிகளில் ரூ.23 இலட்சம் மதிப்பில் குடிநீர்த் திட்டப் பணிகள் தொடங்கப்பட்டு நடந்து வருகின்றன.
இந்த நிலையில் குடிநீர் பிரச்சனையை கருத்தில் கொண்டு சிந்தலவாடி மணல் குவாரியை மூடக்கோரி கடையடைப்பு மற்றும் குவாரி முற்றுகைப் போராட்டத்திற்கு மக்கள் சார்பில் அழைப்பு விடுத்தனர்.
அதன்படி நேற்று லாலாப்பேட்டை பகுதியில் அனைத்துக் கடைகளும் அடைக்கப்பட்டு இருந்தன. மேலும் மணல் குவாரிக்கு எதிராகத் திரண்ட மக்களுடன், ஆற்றுப் பாதுகாப்பு இயக்கத்தினரும் இணைந்து கடை வீதியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
பின்னர் ஊர்வலமாக வந்த மக்களை, அதிகாரிகள் பேச்சுவார்த்தைக்கு அழைத்தனர். இதையடுத்து ஒரு கோவிலில் வைத்து அமைதி பேச்சுவார்த்தைக் கூட்டம் நடத்தப்பட்டது. இதில், கரூர் கூடுதல் காவல் துணை கண்காணிப்பாளர் ஜெயசந்திரன், துணை கண்காணிப்பாளர்கள் கரூர் கும்மராஜா, குளித்தலை முத்துகருப்பன், பொதுப்பணித்துறை உதவிப் பொறியாளர் வீரமுத்து ஆகியோர் மக்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
அப்போது, “சிந்தலவாடி மணல் குவாரியை மூட வேண்டும்” என்று மக்கள் வலியுறுத்தினர்.
பின்னர் உயர் அதிகாரிகளிடம் பேசி, குளித்தலை கோட்டாட்சியர் அலுவலகத்தில் பேச்சுவார்த்தை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது. இதில் ஊர் முக்கிய பிரமுகர்கள் 20 பேர் மட்டும் தேர்ந்தெடுக்கப்பட்டு குளித்தலை சென்று பேச்சுவார்த்தையில் பங்கேற்றனர். அவர்களுடன், ஆட்சியர் (பொறுப்பு) சூர்யபிரகாஷ், குளித்தலை கோட்டாட்சியர் சக்திவேல், கிருஷ்ணராயபுரம் தாசில்தார் பாலசுந்தரம் ஆகியோர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
இதில், “மக்கள் மற்றும் அதிகாரிகள் அடங்கியக் குழு அமைக்கப்பட்டு அரசு சட்ட விதிமுறைகளுக்கு உட்பட்டு மணல் அள்ளும் பணிகள் மேற்கொள்ளப்படும்” என்று தெரிவிக்கப்பட்டது.