
தமிழக பாஜக அலுவகலகத்துக்கு மிரட்டல்…வெடி மருந்து பார்சலைப் பார்த்து மிரண்டுபோன கட்சியினர்…
சென்னை தியாகராய நகரில் உள்ள பாஜக அலுவலகத்துக்கு மர்ம நபர்கள் சிலர் வெடி மருந்து பார்சல் அனுப்பி மிரட்டல் விடுத்துள்ளனர். அந்த பார்சலில் வெடி மருந்து பொடியுடன் மிரட்டல் கடிதமும் அனுப்பப்பட்டிருந்ததது.
இறைச்சிக்காக மாடுகளை விற்பனை செய்வதற்கு கடும் கட்டுப்பாடுகளை விதித்து மத்திய அரசு சமீபத்தில் உத்தரவு பிறப்பித்தது. இதற்கு நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. பல்வேறு இடங்களில் போராட்டங்களும் நடைபெற்று வருகின்றன.
மத்திய அரசின் இந்த நடவடிக்கைக்கு ஆதரவாக தமிழக பாஜக தலைவர் தமிழிசை பேசி வருகிறார். இதற்கு சில அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்திருந்தன. அத்துடன் கடந்த இரு நாட்களுக்கு முன் அவரது வீட்டுக்கு வெடிமருந்து பார்சல் அனுப்பி மிரட்டல் விடுக்கப்பட்டிருந்தது.
‘மாட்டிறைச்சிக்கு எதிராக பேசுவதை நிறுத்தி கொள்ள வேண்டும். இல்லையென்றால் பெரும் விளைவுகளை சந்திக்க நேரிடும்’ என்று அந்த மிரட்டல் கடிதத்தில் எழுதப்பட்டிருந்தது.
இதேபோல் தொலைபேசி மூலமாகவும் அவருக்கு மிரட்டல் வந்துள்ளது. இதன் காரணமாக அவரது வீட்டுக்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டது.
இந்நிலையில், சென்னை தியாகராயநகரில் உள்ள தமிழக பாஜக தலைமை அலுவலகத்திற்கு இன்று ஒரு பார்சல் வந்ததாகவும், அதில், வெடிமருந்துடன் மிரட்டல் கடிதமும் இருந்ததாகவும் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.
இதன் அடிப்படையில் போலீசார் மற்றும் வெடிகுண்டு நிபுணர்கள் மோப்பநாயுடன் பாஜக தலைமை அலுவலகத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த வெடிமருந்து பார்சல் எங்கிருந்து வந்தது? அனுப்பியது யார்? இதன் பின்னணியில் யார் இருக்கிறார்கள்? என்பது பற்றிய விவரங்கள் இது வரை தெரிவிக்கப்படவில்லை.