
ஜல்லிக்கட்டு நடத்த வலியுறுத்தி தமிழகம் முழுவதும் மாணவர்கள் போராட்டம் நடத்தினர். நேற்று முன்தினம் அதிகாலை முதல், போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களை, போலீசார் வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்தினர். இதனால், தள்ளு முள்ளு ஏற்பட்டது. இதையடுத்து போலீசார் தடியடி நடத்தினர்.
இதற்கு, பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். பல இடங்களில் சாலை மறியல் போராட்டம் நடந்தது. மாநிலம் முழுவதும் கலவரம் வெடித்தது. பல்வேறு பகுதிகளில் வாகனங்கள் தீ வைத்து எரிக்கப்பட்டன.
இந்நிலையில், மாணவர்களின் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்தும், தடியடி நடத்திய போலீசாரை கண்டித்தும் சேலத்தில் ரயில் மறியல் போராட்டம் நடந்தது.
அப்போது, சேலம் பெரியார் மேம்பாலம் அருகே, பெங்களூரில் இருந்து காரைக்கால் சென்ற ஜான்சதப்தி எக்ஸ்பிரஸ் ரயிலை மறித்து ஆர்ப்பாட்டம் செய்தனர். இதுதொடர்பாக ரயிலை சேதப்படுத்தியதாக 5 பிரிவுகளின் கீழ், 1000 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.