
டெல்லி ஜே.என்.யூவில் தற்கொலை செய்து கொண்ட சேலத்தைச் சேர்ந்த மாணவர் முத்து கிருஷ்ணன், இறப்பதற்கு முன்பு தனது முகநூல் பக்கத்தில் அதிர்ச்சிகரமான தகவலை வெளியிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
டெல்லி ஜவர்ஹலால் நேரு பல்கலைக்கழகத்தில் எம்.பில் படித்து வந்த சேலத்தைச் சேர்ந்த முத்துக்கிருஷ்ணன் என்ற மாணவர் பல்கலைக்கழக விடுதியில் தங்கியிருந்தார்.
நேற்று பிற்பகலில் டெல்லியில் உள்ள முனிர்கா விஹார் பகுதியில் உள்ள தனது நண்பர்கள் குடியிருப்புக்குச் சென்ற முத்துகிருஷ்ணன் தனியாக இருக்கும் போது தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.
இது குறித்து அவரது நண்பர்கள் தகவல் தெரிவித்ததையடுத்து போலீசார் அங்கு வந்து முத்து கிருஷ்ணன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். அவர் எதற்காக தற்கொலை செய்து கொண்டார். வேறு காரணங்கள் எதுவும் உண்டா என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பு முத்துக்கிருஷ்ணன், தனது முகநூல் பக்கத்தில் தெரிவித்திருந்த கருத்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் சமத்துவமில்லை என்றும் தாழ்த்தப்பட்ட மாணவர்கள் புறக்கணிக்கப்படுகிறார்கள் என அதிர்ச்சி தகவலை வெயியிட்டுள்ளார்.
இதனிடையே முத்துக்கிருஷ்ணன் தற்கொலை செய்துகொள்ள வாய்ப்பில்லை என்று அவரது தந்தை ஜீவானந்தம் உறுதிபடத் தெரிவித்துள்ளார்.
தற்கொலை செய்து கொள்ளும் அளவுக்கு எங்கள் குடும்பத்தில் எந்த பிரச்சனையும் இல்லை என்றும், அவர் குறிப்பிட்டார். இதனிடையே மாணவர் முத்து கிருஷ்ணன் மர்ம மரணம் குறித்து சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. டெல்லி ஜேஎன்யூவில் மாணவர்கள் போராட்டத்துக்கு தயாராகி வருகின்றனர்.