
சிவராஜ் சித்த வைத்திய சாலையினை கவனித்து வந்த சஞ்சய் சிவராஜ் திடீர் உடல்நலக் குறைவால் காலமானார். தந்தை இறந்த ஒரே வருடத்தில் அதே தேதியில் மகனும் இறந்திருப்பது அவர்கள் குடும்பத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சித்த மருத்துவர் சிவராஜ் சிவக்குமார் குடும்பத்தினர் 7 தலைமுறைகளாக, சுமார் 206 ஆண்டுகளுக்கும் மேலாக சித்த மருத்துவர்களாக இருந்துள்ளனர். இவரின் அப்பா சிவராஜ், அம்மா அமிர்தவள்ளி. அப்பா சிவராஜூம் சித்த மருத்துவத்தில் தலைசிறந்து விளங்கினார். அந்த பாரம்பர்யத்தில் வந்த சிவக்குமாருக்கும் சிறு வயதிலிருந்தே சித்த மருத்துவத்தில் ஈடுபாடு அதிகரித்து சித்த மருத்துவத்தில் பல புதிய மருந்துகளையும் கண்டுபிடித்தார்.
சிவராஜ் சிவக்குமாரின் மனைவி பெயர் மல்லிகா. இவர்களுக்கு சிவராஜ் கல்பனா என்ற மகளும் மருத்துவர் சஞ்சய் என்ற மகனும் இருக்கிறார்கள். இவர்கள் சேலம் சிவதாபுரத்தில் உள்ள சிவராஜ் சித்த மருத்துவ கல்லூரியை நிர்வகித்து வருகிறார்கள். சித்த மருத்துவர் சிவக்குமார் சித்த மருத்துவத்தின் மகிமைகளை தொலைக்காட்சிகளில் பேசியும் விளம்பரம் செய்தும் புகழ் பெற்றார். அதையடுத்து சேலம் சிவதாபுரத்தில் மிகப்பெரிய சித்த மருத்துவமனையும் சித்த மருத்துவ கல்லூரியும் தொடங்கினார். தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் அதன் கிளைகளைத் தொடங்கியும் பல மாநிலங்களுக்குச் சென்று மருத்துவ முகாம்கள் நடத்தியும் ஆண்மைக் குறைவு, நரம்பு தளர்ச்சிக்கு சிகிச்சை அளித்து வந்தார்.
இந்த நிலையில் 78 வயதான சிவராஜ் சிவக்குமார் உடல் நலக்குறைவால் சிவதாபுரத்தில் உள்ள வீட்டில் ஓய்வில் இருந்தார். இதனிடையே கடந்த ஆண்டு பிப்ரவரி 10 ஆம் தேதி மாரடைப்பால் மரணம் அடைந்தார். இவரது உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக சிவதாபுரத்தில் உள்ள பூர்விக வீடான அகஸ்தியர் மாளிகையில் வைக்கப்பட்டுள்ளது. அதையடுத்து அரசியல் கட்சியினரும் முக்கிய பிரமுகர்களும் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தினர். சிவராஜ் சிவகுமார் மறைவுக்கு பிறகு அவரின் மகன் சஞ்சய் சிவராஜ், சிவராஜ் சித்த வைத்திய சாலையினை கவனித்து வந்தார். இந்நிலையில், நேற்று பிப்ரவரி 10 ஆம் தேதி சஞ்சய் சிவராஜ் திடீர் உடல்நலக் குறைவால் காலமானார். தந்தை இறந்த ஒரே வருடத்தில் அதே தேதியில் மகனும் இறந்திருப்பது அவர்கள் குடும்பத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.