
இன்று கார்த்திகை மாதம் முதல் நாள். மாதப் பிறப்பான இன்று, மண்டல பூஜைக்காக சபரிமலைக்குச் செல்பவர்கள் மாலை அணிந்து இன்று முதல் விரதம் மேற்கொள்கின்றனர். இப்படி சபரிமலை ஐயப்ப ஸவாமிக்கு விரதமிருந்து மாலை அணியும் பக்தர்கள், அதற்கான பூஜைப் பொருள்களை வாங்க ஆர்வத்துடன் கடைகளில் ஏறி வருகின்றனர்.
கேரளம் மாநிலத்தில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு ஆண்டுதோறும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் விரதமிருந்து செல்கின்றனர். இதற்காக, கார்த்திகை முதல் நாளில் மாலை அணிந்து விரதம் துவங்குகின்றனர். ஒரு மண்டலம் விரதம் மேற்கொண்டு, மகர ஜோதியைக் காண பலரும் செல்வர். அதுவரை தினமும் காலை மாலை வேளைகளில் குளித்து சரண கோஷம் சொல்லி, ஐயப்பனை வணங்கி விரதம் மேற்கொள்கிறார்கள். சபரிமலைக்குச் செல்பவர்களில் தமிழகத்தில் இருந்து செல்பவர்களே மிக அதிகம்.
சபரிமலை ஐயப்பன் பிரம்மச்சாரி தெய்வம் என்பதால், அவருக்காக விரதம் மேற்கொள்ளும் பக்தர்கள் தங்களை தனித்துக் காட்டி தூய்மையான விரதம் பேண, கருப்பு, காவி, நீலம் ஆகிய நிறங்களைக் கொண்ட வேட்டிகளையும், கழுத்தில் துளசி, சந்தனம், மணி, ருத்ராட்ச மாலைகளையும் அணிகிறார்கள்.
இந்த வருடம், கார்த்திகை முதல் நாள், வெள்ளிக்கிழமையான இன்று துவங்குகிறது. எனவே இன்று முதல் ஐயப்ப சுவாமிக்கான விரதத்தை தொடங்குகின்றனர். இன்று காலை அல்லது மாலை நேரத்தில், அருகில் இருக்கும் ஐயப்பன் கோயில்கள், அல்லது ஏதாவது கோயில்களுகுச் சென்று அல்லது குருசாமி எனும் ஆன்மிக வழிகாட்டிகளின் இல்லங்களுக்குச் சென்று துளசி மணி மாலை அணிகின்றனர். இதற்காக, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் சிறியது முதல் பாடல் பெற்ற பெரிய கோயில்கள் வரை ஐயப்ப பக்தர்கள் குழுவினர் முன்பதிவு செய்துள்ளனர்.
இந்நிலையில், தமிழகத்தின் பல்வேறு நகரங்களிலும் விரதத்துக்கான பொருள்கள், பூஜை பொருள்கள் விற்பனை செய்யும் கடைகளில் பக்தர் நேற்று முதலே அலைமோதியது. துளசி, சந்தனம், மணி மாலை ஆகியவை ரூ.25 முதல் ரூ.130 வரையிலும், மாலைகளில் கோர்க்கப்படும் இறை உருவம் பொறித்த டாலர்கள் ரூ.10 விலையிலும், வேட்டிகள் ரூ.100 - 150 ஆகிய விலையிலும் விற்பனை செய்யப்படுகிறது.
இதனிடையே சபரிமலையில் பக்தர்களுக்குப் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப் பட்டுள்ளன. சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.