
சென்னை விமான நிலையத்திலிருந்து நள்ளிரவு 1.45 மணிக்கு கத்தார் தலைநகர் தோகாவுக்கு இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம் புறப்பட்டது. விமானத்தில் 134 பயணிகள் மற்றும் 7 விமான சிப்பந்திகள் என மொத்தம் 141 பேர் இருந்தனர்.
விமானம் புறப்பட்டு சில நிமிடங்களில் நடுவானில் பறந்துகொண்டிருந்தபோது, ஒரு பறவை திடீரென விமானத்தின் முன்பகுதியில் மோதியது. மேலும் விமானத்தின் எஞ்சினுக்குள் அந்த பறவை சிக்கியது.
இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த விமானி, உடனடியாக சென்னை விமான நிலைய கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்தார். அவர்கள், உடனடியாக விமானத்தை சென்னையில் தரையிறக்கும்படி உத்தரவிட்டதை அடுத்து விமானம் 2.15 மணிக்கு சென்னை சர்வதேச விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டது.
விமானம் பத்திரமாக தரையிறக்கப்பட்டதால், விமானத்தில் இருந்த 141 பேரும் பாதுகாக்கப்பட்டனர். இதையடுத்து விமானத்தை பழுதுபார்க்கும் முயற்சியில் அதிகாரிகள் ஈடுபட்டனர். ஆனால், பறவை விமானத்தின் முன்பகுதியைத் துளைத்து உள்ளே சிக்கியதால், விமானத்தை உடனடியாக பழுதுபார்க்க முடியவில்லை. அதனால் மாற்று விமானத்தில் பயணிகள் அனுப்பிவைக்கப்பட்டனர்.
இதுகுறித்து விசாரணை நடத்தி அறிக்கை அளிக்குமாறு சென்னை விமான நிலைய உயரதிகாரிகளுக்கு விமான போக்குவரத்து பொது இயக்குநகரம் உத்தரவிட்டுள்ளது.
பறவைகள் இனப்பெருக்கம் செய்யும் காலம் என்பதால் வெளிநாட்டு பறவைகள் தமிழகத்துக்கு வர தொடங்கியுள்ளன. விமானம் புறப்படுவதற்கு சிறிது நேரத்துக்கு முன்பு வெடிவைத்து பறவைகளை விரட்டுவது வழக்கம் என விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த பணியை ஒப்பந்ததாரர்கள் செய்வதாகவும், இனிமேல் பறவைகள் இனப்பெருக்க காலத்தில் அதிகமான வெடிவைத்து பறவைகளை விரட்டும் பணியை மேற்கொள்ள வேண்டும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இச்சம்பவம் விமானப் பயணிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.