பழுதடைந்த சாலைகளை சீரமைக்க கோரி போராடிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் 61 பேர் கைது....

First Published Nov 17, 2017, 8:47 AM IST
Highlights
61 Marx Communist Party members arrested for demanding to repair damaged roads


கன்னியாகுமரி

கன்னியாகுமரியில் பழுதடைந்த சாலைகளை சீரமைக்கக் கோரி சாலை மறியல் போராட்டம் நடத்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் 61 பேர் கைது செய்யப்பட்டனர்.

கன்னியாகுமரி மாவட்டம், ஆற்றூர் புளியமூடு சந்திப்பில் உள்ள சாலையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் நேற்று சாலை மறியலில் ஈடுபட்டனர்.

"ஆற்றூர் – வெட்டுகுழி சாலை, குட்டகுழி, தேமானூர், தோட்டவாரம், செங்கோடி, பூவங்குழி, முளகுமூடு ஆகிய பழுதடைந்த சாலைகளை சீரமைக்க வேண்டும்" என்று வலியுறுத்தி இந்த சாலை மறியல் போராட்டம் நடைப்பெற்றது.

இந்த போராட்டத்திற்கு வட்டாரச் செயலாளர் வில்சன் தலைமை வகித்தார். முன்னாள் எம்.பி. பெல்லார்மின் போராட்டத்தைத் தொடங்கி வைத்தார். இதில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் அண்ணாத்துரை, மாவட்ட குழு உறுப்பினர் சகாய ஆண்டனி, ஜோஸ் மனோகரன், ஐசக் அருள்தாஸ் உள்பட ஏராளமானோர் பங்கேற்றனர்.

இதுபற்றி தகவல் அறிந்ததும் திருவட்டார் காவலாளர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாததையடுத்து 12 பெண்கள் உள்பட 61 பேரை காவலாளர்கள் கைது செய்தனர். அவர்கள் அனைவரையும் அருகில் உள்ள மண்டபத்தில் தங்க வைத்து மாலையில் விடுவித்தனர்.

click me!