
காஞ்சிபுரம்
இந்தியாவில் கூட்டுறவு இயக்கத்தின் முன்னோடி காஞ்சிபுரம் மாவட்டம்தான் என்று காஞ்சிபுரத்தில் நடைப்பெற்ற கூட்டுறவு வார விழாவில் ஆட்சியர் பொன்னையா பெருமிதத்தோடு தெரிவித்தார்.
காஞ்சிபுரம் மாவட்டம், அறிஞர் அண்ணா அரங்கில் 64-வது அனைத்து இந்திய கூட்டுறவு வார விழா நடைப்பெற்றது. இந்த விழாவில் 168 பேருக்கு ரூ. 3.5 கோடி மதிப்பிலான நலத் திட்டங்களை ஆட்சியர் பொன்னையா வழங்கினார்.
அதன்பின்னர் ஆட்சியர் பேசியது: "தமிழகத்தில் காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்கள் ஒருங்கிணைந்த செங்கல்பட்டு மாவட்டமாகச் செயல்பட்டபோது, நாட்டிலேயே திரூர் எனும் கிராமத்தில்தான் 1904- ஆம் ஆண்டு முதல் கூட்டுறவு கடன் சங்கம் தொடங்கப்பட்டது.
அதுபோல், அதே ஆண்டில் நாட்டிலேயே முதன் முதலில் காஞ்சிபுரத்தில்தான் நகரக் கூட்டுறவு வங்கி தொடங்கப்பட்டது. எனவே, நாட்டின் கூட்டுறவு இயக்கத்தின் முன்னோடி காஞ்சிபுரம் மாவட்டம் என்பது பெருமைக்குரியது.
அதன்படி, விவசாயிகள் நகர்ப்புற மக்கள், ஏழை எளியோர் பயன்படும் வகையில் மொத்தம் 827 சங்கங்கள் செயல்பட்டு வருகின்றன. இதில், தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்கள் உள்ளிட்ட 170 கூட்டுறவுச் சங்கங்கள் மூலம் கடன் வழங்கப்பட்டு வருகின்றன.
நிகழாண்டு அக்டோபர் மாதம் வரை, 5784 விவசாயிகளுக்கு ரூ. 37 கோடி வட்டியில்லா பயிர்க் கடன் வழங்கப்பட்டுள்ளது. இதில், 7 சதவீதம் வட்டியை அரசு ஏற்றுக் கொள்வது குறிப்பிடத்தக்கது.
அதுபோல், முதலீட்டுக் கடன் 259 பேருக்கு ரூ. 1.70 கோடியும், நகைக்கடன் 1 இலட்சத்து 63 ஆயிரத்து 884 பேருக்கு ரூ. 735.16 கோடி, 1279 மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ. 20 கோடியும், வீட்டு அடமானக் கடனாக 556 பேருக்கு ரூ. 27.64 கோடியும் வழங்கப்பட்டுள்ளன.
அதுபோல், மாற்றுத் திறனாளிகள் 175 பேருக்குக் கடனாக ரூ. 34.57 இலட்சமும், பண்ணை சாராக் கடன்களாக 906 பேருக்கு ரூ. 9.54 கோடி, தானிய ஈட்டுக்கடனாக 359 பேருக்கு ரூ. 8.30 கோடியும் வழங்கப்பட்டுள்ளன.
உழைக்கும் மகளிர், மகப்பேறு மகளிர், வீட்டு வசதி, மகளிர் சிறு வணிகத்துக்கு மற்றும் டாப்செட்கோ, டாம்கோ உள்ளிட்ட பல்வேறு கடன்கள் வழங்கப்பட்டுள்ளன.
மேலும், விவசாயத்திற்குத் தேவையான உரங்கள், இடு பொருள்களை கூட்டுறவு சங்கங்கள் வழங்கி வருகின்றன. அதுபோல், கூட்டுறவு வங்கி, கடன் சங்களின் சார்பில் ரூ. 2696 கோடி அளவுக்கு வைப்புத்தொகைகள் உள்ளன.
அதுபோல, 1424 கூட்டுறவு நியாய விலைக் கடைகள் மூலம் 6 இலட்சத்து 11 ஆயிரத்து 767 பேர் பயனடைந்து வருகின்றனர். மேலும், மாதத்திற்கு 10237 மெட்ரிக் டன் அரிசி இலவச திட்டத்தின் மூலம் வழங்கப்பட்டு வருகிறது.
நியாய விலைக் கடைகளில் அயோடின் கலந்த உப்பு மாதந்தோறும் 180 மெட்ரிக் டன்கள் மற்றும் நிகழாண்டில் அக்டோபர் மாதம் வரை 32 மெட்ரிக் டன்கள் தேயிலை விற்பனை செய்யப்பட்டுள்ளது.
எனவே, தொடர்ந்து கூட்டுறவு சங்கங்களின் வளர்ச்சிக்கு அலுவலர்கள், பணியாளர்கள் உள்ளிட்டோர் அர்ப்பணிப்பு உணர்வுடன் செயல்படவேண்டும்" என்று அவர் பேசினார்.
இந்த விழாவில், கூட்டுறவு வார விழாவினையொட்டி நடைபெற்ற போட்டிகளில் வென்ற மாணவர்களுக்குப் பரிசுகள், சான்றிதழ்கள் மற்றும் சிறப்பாக செயல்பட்ட கூட்டுறவு சங்கங்களுக்குக் கேடயங்கள் ஆகியவற்றை ஆட்சியர் வழங்கினார்.
இதில், மக்களவை உறுப்பினர் மரகதம் குமரவேல், காஞ்சிபுரம் எம்.எல்.ஏ. எழிலரசன், முன்னாள் எம்எல்ஏ-க்கள் வாலாஜாபாத் கணேசன், மைதிலி திருநாவுக்கரசு, முன்னாள் மக்களவை உறுப்பினர்கள் காஞ்சி பன்னீர் செல்வம்,
மாவட்ட கூட்டுறவு ஒன்றிய துணைத்தலைவர் ஆறுமுகம், கூட்டுறவு மண்டல இணைப்பதிவாளர் சந்திரசேகரன், மத்திய கூட்டுறவு வங்கித் தலைவர் கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.