பயமுறுத்தும் ‘சாகர்’ புயல்….. மீனவர்களுக்கு எச்சரிக்கை…. தமிழ்நாடுக்கு என்ன பாதிப்பு ?

First Published May 18, 2018, 7:50 AM IST
Highlights
Saagar strom in yemen sea warning to fishermen


அரபிக் கடல் பகுதியில் ஏடன் வளைகுடாவில் உருவாகியுள்ள  ‘சாகர்’  புயலால் தமிழகத்திற்கு எந்த பாதிப்பும் இல்லை என்றும்,  அதே நேரத்தில் மீனவர்கள் தென் மேற்கு கடல் பகுதியில் மீன் பிடிக்கச் செல்ல வேண்டாம் என  சென்னை வானிலை ஆண்வு மையம் எச்சரித்துள்ளது.

தென் மேற்கு அரபிக்கடலில் ஏடன் வளைகுடா பகுதியில் புயல் ஒன்று உருவாகி உள்ளது. அதற்கு சாகர் என்று பெயரிடப்பட்டுள்ளது. கடந்த 2004-ம் ஆண்டில் இருந்து புயலுக்கு பெயர் வைக்கப்பட்டு வரும் நிலையில் தற்போது உருவாகியுள்ள . இந்த புயல் 50-வது புயல் ஆகும்.

இந்த புயலால் தமிழகத்திற்கு எந்த தாக்கமும் இல்லை. இந்த புயல் ஏமன் பகுதிக்கு கிழக்கில் 400 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது. இது தென் மேற்கு திசையில் நகர்ந்து ஏமனை நோக்கி செல்கிறது. எனவே, மீனவர்கள் தென் மேற்கு அரபிக்கடலுக்கு அடுத்து 2 நாட்களுக்கு செல்லவேண்டாம்.

அதே நேரத்தில் வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தின் தென் மாவட்டங்களில் சில இடங்களில் இன்று  கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக  வானிலை மைய இயக்குனர் எஸ்.பாலச்சந்திரன் தெரிவித்தார்.



தமிழகத்தில் கடந்த வருடம் வடகிழக்கு பருவமழை பல மாவட்டங்களில் போதிய அளவு பெய்யவில்லை. இதன் காரணமாக கோடை காலத்தில் மழை பெய்யவேண்டும் என்று மக்களும் விவசாயிகளும் எதிர்பார்த்து உள்ளனர்.கடந்த சில நாட்களாக பல இடங்களில் கோடை மழை பெய்து வருகிறது.

வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் தென் மாவட்டங்களில் சில இடங்களில் இன்று மழை பெய்யும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

click me!