எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணனுக்கு சாகித்ய அகாடமி விருது !! தலைவர்கள் வாழ்த்து !!

By Selvanayagam PFirst Published Dec 6, 2018, 6:41 AM IST
Highlights

தமிழ் மொழிக்கான 2018-ம் ஆண்டின் சாகித்ய அகாடமி விருதுக்கு எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். 'சஞ்சாரம்'  என்ற நாவல் எழுதியதற்காக அவருக்கு இந்த விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் 24 மொழிகளில் வெளியாகும் சிறந்த இலக்கியப் படைப்புகளைத் தேர்வு செய்து ‘சாகித்ய அகாடமி’ சார்பில் ஆண்டுதோறும் விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. தமிழ் நூலுக்குரிய இந்த ஆண்டுக்கான விருது யாருக்கு கிடைக்கும் என்பது பற்றி தமிழ் எழுத்தாளர்கள் மற்றும் இலக்கிய ஆர்வலர்கள் மத்தியில் பரவலாக விவாதிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் 'சஞ்சாரம்' நாவலுக்காக எஸ்.ராமகிருஷ்ணனுக்கு சாகித்ய அகாடமி விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

எஸ்.ராமகிருஷ்ணன் விருதுநகர் மாவட்டம் மல்லாங்கிணறு கிராமத்தைச் சேர்ந்தவர். இவர் கடந்த 1984 ஆம் ஆண்டு முதல் சிறுகதைகள் எழுதி வருகிறார். இவரது முதல் கதையான 'பழைய தண்டவாளம்' கணையாழி சிற்றிதழில் வெளியானது. தமிழ் உரைநடையிலும் சிறுகதைகளிலும் பெரும் மாற்றத்தை உருவாக்கிய எழுத்தாளர்களில் ஒருவரான எஸ்.ராமகிருஷ்ணன் 25 ஆண்டு காலமாக தொடர்ந்து முழு நேரமாக எழுதி வருகிறார்.

எஸ்.ராமகிருஷ்ணனின் சிறுகதைகள் ஆங்கிலம், டச்சு, கன்னடம், வங்காளம், இந்தி, மலையாளம் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. அட்சரம் என்ற இலக்கிய இதழை சில காலம் நடத்தி வந்தார்.

சர்வதேச திரைப்படங்கள் மீதும், உலக இலக்கியங்கள் மீதும் தமிழ் சமூகத்தின் கவனத்தைக் குவித்து வரும் எஸ்.ரா கரிசல் பூமியில் நாதஸ்வரக் கலைஞர்களின் வாழ்வில் நடக்கும் துயரங்களை வைத்து 'சஞ்சாரம்' நாவலை எழுதினார்.  இந்நாவலை எழுதியதற்காக எஸ்.ராவுக்கு சாகித்ய அகாடமி விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

சாகித்ய அகாடமி  விருது பெற்றுள்ள எஸ்.ராமகிருஷ்ணனுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், கனிமொழி, டி.டி.வி.தினகரன், வைகோ, பாலகிருஷ்ணன் போன்ற முக்கிய தலைவர்கள் அவருக்கு வாழ்த்துத் தெரிவித்துள்ளனர்.

click me!