
திண்டுக்கல்
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்த, கொடைக்கானல் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஊரக வளர்ச்சித் துறை ஊழியர்கள் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழகம் முழுவதும் 12,618 ஊராட்சிகள் உள்ளன. இவ்வூராட்சிகளில் பணிபுரிந்து வரும் ஊராட்சிச் செயலர்களுக்கு, இளநிலை உதவியாளருக்கு இணையான ஊதியத்தை கருவூலம் மூலம் வழங்க வேண்டுமென நீண்டகாலமாக கோரிக்கை விடுக்கப்பட்டு வந்தது. ஆனால், இதுவரை நிறைவேற்றப்படவில்லை.
இதனைக் கண்டித்து ஊரக வளர்ச்சித்துறை அனைத்து சங்கங்களின் கூட்டமைப்பின் சார்பில் பணிகளைப் புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அதன்படி, தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அனைத்துச் சங்கங்களின் கூட்டமைப்பு கொடைக்கானல் ஊராட்சி ஒன்றியம் அலுவலகப் பணியாளர்கள் சங்கம் சார்பில் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்தப் போராட்டத்திற்கு சங்கத்தின் மாவட்ட துணைத் தலைவர் சீனிவாசன் தலைமைத் தாங்கினார். இதில் ஊரக வளர்ச்சித்துறை அனைத்து சங்கங்களின் நிர்வாகிகள், பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
இதில், "தமிழகம் முழுவதுமுள்ள ஊராட்சிச் செயலர்களுக்கு இளநிலை உதவியாளர்களுக்கு இணையான ஊதியத்தை கருவூலம் மூலம் வழங்க வேண்டும்" உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
அதேபோன்று, பழனியில், "ஊதிய நிர்ணயத்தில் மாற்றம் செய்ய வேண்டும்" என்று வலியுறுத்தி ஊராட்சி அலுவலர்கள் பழனி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த கோரிக்கையை நிறைவேற்றாவிட்டால் வரும் டிசம்பர் 23ஆம் தேதி முதல்வரை சந்தித்து பெருந்திரள் முறையீடு போராட்டம் நடத்துவதென்றும், ஜனவரி முதல் வாரம் முதல் தொடர் பணிப் புறக்கணிப்புப் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாகவும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள கூட்டமைப்பு நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.