
தருமபுரி
வீடில்லாத தொழிலாளர்களுக்கு ரூ. 7 இலட்சம் மதிப்பில் வீடுகளை கட்டித் தர வேண்டும் என்று தமிழ்நாடு அனைத்து அமைப்புச் சாரா தொழிலாளர் முன்னேற்றச் சங்கத்தினர் தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர்.
தருமபுரி மாவட்டம், அரூரில் தமிழ்நாடு அனைத்து அமைப்புச் சாரா தொழிலாளர் முன்னேற்றச் சங்கத்தினரின் கருத்தரங்குக்கு ஒன்று நடைப்பெற்றது.
இந்தக் கருத்தரங்கிற்கு சங்க மாநிலத் துணைத் தலைவர் ஜே.பழனி தலைமைத் தாங்கினார்.
இதில், "கட்டுமான பெண் தொழிலாளர்களுக்கு 50 வயதிலும், ஆண் தொழிலாளர்களுக்கு 55 வயதிலிருந்தும் மாதந்தோறும் உதவித் தொகையாக ரூ.3000 வழங்க வேண்டும்.
திருமண நிதியாக தொழிலாளர்களுக்கு ரூ. 50 ஆயிரம் வழங்க வேண்டும்.
நல வாரியத்தில் பதிவு செய்துள்ள தொழிலாளர்கள் இயற்கை மரணம் அடைந்தால் ரூ. 1 இலட்சமும், விபத்தில் உயிரிழந்தால் ரூ. 5இலட்சமும் அரசு வழங்க வேண்டும்.
வீடில்லாத தொழிலாளர்களுக்கு ரூ. 7 இலட்சம் மதிப்பில் வீடுகளை கட்டித் தர வேண்டும்.
கட்டுமானத் தொழிலாளர் நல வாரியத்தில் பதிவு செய்ய கிராம நிர்வாக அலுவலர் பரிந்துரை செய்யும் முறையை ரத்து செய்ய வேண்டும்" உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இதில், தொமுச பொதுச் செயலர் மு.சண்முகம், திமுக மாவட்டச் செயலர் தடங்கம் பெ.சுப்பிரமணி எம்எல்ஏ, தொமுச மாநிலச் செயலர் கி.நடராஜன், திமுக ஆதிதிராவிடர் நலக்குழு மாநில துணைச் செயலர் சா.ராஜேந்திரன், பேச்சாளர் ப.செந்தாமரைக்கண்ணன், சங்க வட்டத் தலைவர் ஏ.தீர்த்தகிரி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.