
தருமபுரி
அனைத்துக் கட்டுமானப் பணிகளும் முடிந்து பல மாதங்கள் ஆகியும் இன்னமும் திப்பம்பட்டி பேருந்து நிலையத்தை திறக்காததால் மக்கள், "எப்போ சார் பேருந்து நிலையத்தை திறப்பீர்கள்" என்று கேள்வி எழுப்பியுள்ளனர்.
தருமபுரி மாவட்டம், மொரப்பூர் ஒன்றியம், பன்னிகுளம் ஊராட்சிக்கு உள்பட்டது திப்பம்பட்டி கிராமம். தருமபுரி - சென்னை செல்லும் பிரதான சாலையில் உள்ள இப்பகுதி அரூர், காரிமங்கலம், கிருஷ்ணகிரி உள்ளிட்ட பல்வேறு ஊர்களுக்கு வாகனங்கள் செல்லும் முக்கியமான பகுதி.
இந்தச் சாலை வழியே, நாய்க்கன்கொட்டாய் வழியாக தருமபுரிக்கும், அரசம்பட்டி வழியாக மத்தூர், ஊத்தங்கரை உள்ளிட்ட பகுதிகளுக்கும், காரிமங்கலம், கிருஷ்ணகிரி வழியாக ஒசூருக்கும் மற்றும் மொரப்பூர், அரூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு நகரப் பேருந்துகள் சென்று வருகின்றன.
இதுதவிர, கர்நாடகம், ஆந்திரம் போன்ற மாநிலங்களிலிருந்து சேலம் செல்லும் சரக்கு வாகனங்களும் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள சுங்கச் சாவடிகளை தவிர்க்க திப்பம்பட்டி வழியாக செல்லவும் இந்தச் சாலை பயன்படுத்துகின்றன.
நாள்தோறும் நூற்றுக்கணக்கான நகரம் மற்றும் புறநகரப் பேருந்துகள் சாலையில் பேருந்து நிலையம் இல்லாததால், திப்பம்பட்டி கூட்டுச் சாலையிலேயே பேருந்துகள் நிறுத்தி பயணிகளை ஏற்றி, இறக்கிவிடுகின்றன. இதனால், சாலையோரத்தில் எப்போதும் நூற்றுக்கணக்கானோர் பேருந்துகளுக்காக காத்திருப்பர்.
இதனால், சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதோடு சில நேரங்களில் விபத்துகளும் ஏற்படுகின்றன. மேலும், மழை மற்றும் வெயில் காலங்களிலும் பயணிகள் சாலை ஓரத்திலேயே நிற்க வேண்டி உள்ளது.
இதனைத் தவிர்க்க, "திப்பம்பட்டி கூட்டுச் சாலையில், பேருந்து நிலையம் அமைக்க வேண்டும்" என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்தனர்.
இதனையடுத்து, அங்கு பேருந்து நிலையம் கட்டுவதற்காக ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை சார்பில், ஒருங்கிணைக்கப்பட்ட ஒப்படைக்கப்பட்ட வருவாய் இனங்கள் திட்டத்தின் கடந்த 2015 - 16-ல் ரூ. 1 கோடியே 18 இலட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
திப்பம்பட்டி கூட்டுச் சாலையில் நிலம் தேர்வு செய்யப்பட்டு, கட்டுமானப் பணிகள் கடந்த 2016 பிப்ரவரி 26-ல் அடிக்கல் நாட்டுவிழா நடைபெற்றது.
பயணிகள் காத்திருப்புக் கூடம், கழிவறை ஆகியவையும் பேருந்து வந்துச் செல்ல ஏதுவாக காலியிடம் ஒதுக்கீடு என அனைத்துப் பணிகளும் கடந்த சில மாதங்களுக்கு முன் நிறைவடைந்தன.
பேருந்து நிலைய கட்டுமானப் பணிகள் அனைத்தும் நிறைவடைந்து பல மாதங்களாகியும் இதுவரை மக்கள் பயன்பாட்டிற்கு வரவில்லை. இதனால், சாலையோரத்திலேயே பேருந்துகளுக்காக பயணிகள் காத்திருக்கும் நிலை நீடிக்கிறது.
எனவே, பயணிகளின் நலன்கருதி இப்பேருந்து நிலையத்தை உடனே திறக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இம்மக்களின் எதிர்பார்ப்பு.