தனியார் பள்ளிகளில் ஆர்.எஸ்.எஸ். பயிற்சி முகாம்கள்; அனுமதி கொடுக்கும் தமிழக அரசு - கண்டிக்கும் வீரமணி...

First Published May 19, 2018, 9:21 AM IST
Highlights
rss conducting training camps in private schools Tamilnadu government give permission - veeramani condemned


தஞ்சாவூர் 

தமிழ்நாட்டில் ஆர்.எஸ்.எஸ். காலூன்ற முயற்சி செய்து தனியார் பள்ளிகளில் பயிற்சி முகாம்களை நடத்துகிறது. இதற்கு அரசாங்கம் அனுமதி கொடுத்திருப்பது மிகவும் கண்டனத்துக்குரியது என்று தஞ்சாவூரில் திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி தெரிவித்துள்ளார்.

தஞ்சாவூரில், ‘விடுதலை’ விருது வழங்கும் விழா நேற்று நடந்தது. இந்த விழாவில் விடுதலை ஆசிரியரும், திராவிடர் கழக தலைவருமான கி.வீரமணி பங்கேற்றார். 

இந்த விழாவில், கி.வீரமணி எழுதிய ‘தமிழ்நாட்டில் சமூக நீதி வரலாறு ஒரு பார்வை’ என்ற நூல் வெளியிடப்பட்டது. மேலும், மருத்துவர் செல்வராசு, எஸ்.எஸ்.ராஜ்குமார், உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி நாகமுத்து ஆகியோருக்கு விடுதலை விருது வழங்கப்பட்டது. நீதிபதி நாகமுத்துக்கான விருதினை அவருடைய மகள் பெற்றுக்கொண்டார்.

இந்த விழாவில் பெரியார் சுய மரியாதை பிரசார நிறுவன துணைத்தலைவர் ராஜகிரி தங்கராசு, திராவிடர் கழக பொதுச்செயலாளர்கள் அன்புராஜ், ஜெயக்குமார், மாவட்ட தலைவர் வழக்கறிஞர் அமர்சிங் மற்றும் திராவிடர் கழக நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.

விழாவுக்கு பிறகு திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அதில், "தமிழ்நாட்டில் ஆர்.எஸ்.எஸ். காலூன்ற முயற்சி செய்து தனியார் பள்ளிகளில் பயிற்சி முகாம்களை நடத்துகிறது. இதற்கு அரசாங்கம் அனுமதி கொடுத்திருப்பது மிகவும் வேதனைக்கும், கண்டனத்துக்கும் உரியது. 

மதசார்பின்மை கட்சிகள் ஒன்று சேரவேண்டிய சூழ்நிலையை கர்நாடக தேர்தல்  உண்டாக்கிவிட்டது. இந்த நல்ல ஒரு ஒற்றுமையை பிரதமர் மோடி தன்னுடைய அதீத நடவடிக்கையின் மூலமாக உருவாக்கியிருக்கிறார்.

இதுவரை ஒதுங்கியிருந்த கேரளா, ஆந்திரா, புதுச்சேரி முதல் மந்திரிகள், கர்நாடக எம்.எல்.ஏக்களுக்கு பாதுகாப்பு கொடுக்கிறோம் என்று வந்திருக்கிறார்கள். 

மதசார்பற்ற கட்சிகள் ஒன்றிணைந்து பாரதீய ஜனதாவை எதிர்க்கக் கூடிய கூட்டணி வரவேண்டும். இதன்மூலம்தான் இந்த தேசத்தை காப்பாற்ற முடியும், சமூக நீதியையும் காப்பாற்ற முடியும். 

நீட் தேர்வு நிலைபெற்றுவிடக் கூடாது என்பதற்காக தொடர்ந்து ஒத்த கருத்துடையவர்களுடன் இணைந்து நாங்கள் போராட்டத்தை நடத்தி வருகிறோம்.

காவிரி நதி நீர் விவகாரத்தில், உச்சநீதிமன்றம் திருத்தப்பட்ட மத்திய அரசு திட்டத்தை ஏற்கிறோம் என்று சொல்லியிருப்பது நம்பிக்கை அளிப்பதாக உள்ளது. 

ஆணையமா அல்லது வாரியமா என்பது முக்கியமல்ல. நடுவர் மன்றம் தீர்ப்புப்படி நமக்கு தேவையான தண்ணீர் கிடைக்கவேண்டியது தான் முக்கியம். 

மத்திய அரசு தலையீடு இல்லாமல் ஆணையம் செயல்பட வேண்டும். இதற்கு தமிழக அரசு தொடர்ந்து அழுத்தம் கொடுக்க வேண்டும்" என்று அவர் கூறினார். 

click me!