சிவகங்கையில் இரண்டு நாட்களாக இடி, மின்னலுடன் பலத்த மழை; கத்தரி வெயிலில் இருந்து தப்பித்ததால் மக்கள் மகிழ்ச்சி...

First Published May 19, 2018, 9:04 AM IST
Highlights
Heavy rain with lightning and thunder in Sivagangai People are happy to escape from the sun ...


சிவகங்கை

சிவகங்கையில் கடந்த இரண்டு நாட்களாக இடி, மின்னலுடன் கூடிய பலத்த மழை பெய்து வருகிறது. மின் வினியோகம் தடைப்பட்டாலும் கத்தரி வெயிலின் தாக்கத்தில் இருந்து தப்பித்ததால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். 

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் பகுதியில் கடந்த இரண்டு நாட்களாக இடி, மின்னலுடன் கூடிய பலத்த மழை பெய்து வருகிறது. இதில், மின் கம்பிகள் சேதமடைந்து திருப்பத்தூர் பகுதியில் மின் வினியோகம் தடைப்பட்டது. 

அதன்படி, கடந்த இரண்டு நாட்களாக மின் வினியோகம் தடைபட்டதால் இப்பகுதி மக்கள் பெரிதும் அவதி அடைந்து வருகின்றனர். 

மேலும், பல்வேறு வீடுகளில் அதிகம் மற்றும் மிக குறைந்த அழுத்த மின்சாரத்தால் டி.வி., பிரிட்ஜ், வாஷிங் மெஷின், மின்விசிறி உள்ளிட்ட பொருட்கள் பழுதடைந்துள்ளன.

இதுகுறித்து காரையூர் பகுதியைச் சேர்ந்த மக்கள், "மழைக்காலம் மற்றும் இயற்கை சீற்றங்களின்போது தொடர்ந்து இதுபோன்ற சிரமத்தை நாங்கள் சந்தித்து வருகின்றனர். 

கடந்த இரண்டு நாட்களாக இந்த பகுதியில் மின்வினியோகம் தடைபட்டதால் குடிநீர்  விநியோகமும் பாதிக்கப்பட்டுள்ளது. 

எனவே, சம்பந்தப்பட்ட மின்வாரிய அதிகாரிகள் இந்த பகுதியில் கூடுதல் கவனம் செலுத்தி இந்த பகுதியில் உள்ள மின்இணைப்பை சரி செய்து தொடர்ந்து சீரான மின்வினியோகம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றனர். 

இதேபோல காரைக்குடி பகுதியில் நேற்று காலை வெயில் தாக்கம் அதிகமாக இருந்தது.  ஆனால், மதியம் 2.30 மணிஅளவில் பலத்த இடியுடன் சுமார் 1 மணி நேரம் விடாமல் மழை பெய்தது. இதனால் காரைக்குடி பகுதியில் நடைபெற்று வந்த பாதாள சாக்கடை திட்ட பணி ஒத்தி வைக்கப்பட்டது. மேலும், இந்த பணிக்காக ஆங்காங்கே தோண்டப்பட்ட பள்ளங்களில் மழைநீர் நிரம்பியது. 

மேலும், காரைக்குடி கல்லூரி சாலை, செக்காலை சாலை, நூறடி சாலை, 2-வது பீட் பகுதி ஆகிய பகுதியில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. 

கத்தரி வெயில் தாக்கம் இருந்துவரும் நிலையில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருவதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். 
 

click me!