விவசாயிகளுக்கு தரவேண்டிய இழப்பீட்டு தொகையை உடனே வழங்க வேண்டி கம்யூனிஸ்டு கட்சி வலியுறுத்தல்...

First Published May 19, 2018, 8:56 AM IST
Highlights
indian Communist Party emphasis government to give compensation to farmers immediately.


சிவகங்கை
 
பயிர்காப்பீடு செய்த 13 ஆயிரம் விவசாயிகளுக்கு வழங்கவேண்டிய இழப்பீட்டு தொகையை உடனே வழங்க வேண்டும் என்று சிவகங்கையில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி வலியுறுத்தி உள்ளது. 

இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில குழு உறுப்பினர்கள் குழு கூட்டம் சிவகங்கையில் நடைபெற்றது. இதற்கு மாவட்டச் செயலாளர் கண்ணகி தலைமை தாங்கினார். 

இந்தக் கூட்டத்தில், "சிவகங்கை மாவட்டத்தில் 2016-17-ஆம் ஆண்டுக்கு பயிர்காப்பீட்டு செய்த 13 ஆயிரம் விவசாயிகளுக்கு இன்றுவரை இழப்பீட்டு தொகை வழங்கப்படவில்லை. எனவே உடனடியாக விவசாயிகளுக்கு காப்பீட்டு இழப்பீடு தொகை வழங்க வேண்டும். 

2017-18-ஆம் ஆண்டிற்கு பயிர்காப்பீட்டு திட்டத்தில் சேர்ந்தவர்களுக்கு வழங்க வேண்டிய இழப்பீட்டுத் தொகை கணக்கெடுப்பு நடைபெற்றுள்ளதா என்பது குறித்த எந்த விவரமும் இதுவரை தெரியவில்லை. எனவே, மாவட்ட நிர்வாகம் உடனடியாக இது குறித்து அறிக்கையை வெளியிட வேண்டும்.

சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் எலும்பு முறிவு சிகிச்சைப் பிரிவிற்கு வரும் நோயாளிகளுக்கு உரிய சிகிச்சை அளிக்காமல் வெளியிடங்களுக்கு அனுப்பி வைக்கின்றனர். இவ்வாறு அனுப்புவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதுடன் நோயாளிகளுக்கு சிவகங்கை மருத்துவமனையிலேயே சிகிச்சை அளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். 

சிவகங்கை மாவட்டத்தில் வைகை மற்றும் சிற்றாறுகளில் அனுமதியின்றி மணல் அள்ளுவது தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அளவுக்கு அதிகமாக மணல் எடுப்பதால் நீர் ஆதாரங்கள் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வறட்சி ஏற்பட்டுள்ளது.

எனவே, தமிழக அரசு நடவடிக்கை எடுத்து அனுமதியின்றி மணல் அள்ளுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுப்பதுடன் மக்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டும்" உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. 

இந்தக் கூட்டத்தில் மாநில குழு உறுப்பினர் கோபால், நிர்வாகிகள் ஆறுமுகம், திருச்செல்வம், முருகன், குணாளன், நாச்சியப்பன் உள்பட பலர் பங்கேற்றனர்.

click me!