
ஆர்.கே. நகரில் 43 ஆயிரம் போலி வாக்காளர்களை நீக்கக்கோரி, திமுக சார்பில் மாநிலங்களவை உறுப்பினர் ஆர்.எஸ். பாரதி, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானியுடம் மனு ஒன்றை அளித்துள்ளார்.
பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஆர்.கே. நகரில் போலி வாக்காளர்கள் நீக்கம் குறித்து தமிழக தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானியிடம் திமுக சார்பில் மனு கொடுத்துள்ளதாக கூறினார். அதற்கு 17 ஆயிரம் போலி வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளதாகவும், மீதமுள்ள வாக்காளர்களை நீக்கப்படுவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் ராஜேஷ் லக்கானி கூறியதாக தெரிவித்தார்.
ஆர்.கே. நகர். வாக்காளர் பட்டியல் இன்னும் 2 மாதத்தில் வாக்காளர் பட்டியலை திருத்த வேண்டும் என்றும், இடைத்தேர்தல் நடத்தும் அதிகாரி விஜயகுமாரை மாற்றவும் அந்த மனுவில் வலியுறுத்தி உள்ளதாக தெரிவித்தார்.
வரும் செப்டம்பர் மாதத்தில் ஆர்.கே. நகர் இடைத்தேர்தல் நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும் அவர் கூறினார்.
புதிய வாக்காளர்கள் சேர்ப்பு மற்றும் நீக்கம் குறித்த முகாம் தமிழ்நாடு முழுவதும் நேற்று நடைபெற்றது. இதில் பொதுமக்கள் ஏராளமானோர் பங்கேற்றிருந்தனர். ஆனால், ஆர்.கே. நகரில் நடந்த முகாமில் புதிய வாக்காளர்கள் நீக்கம் மற்றும் சேர்ப்பு முறையாக நடத்தப்பெறவில்லை என்றார். ஆர்.கே. நகரில் போலி வாக்காளர்கள் பெயர்களை நீக்கத் தவறினால் நீதிமன்றத்தை அணுக உள்ளதாகவும் ஆர்.எஸ். பாரதி கூறினார்.