
கரூர்
கோடைகால விடுமுறையையொட்டி கரூரில் இரயில் டிக்கெட் விற்பனை மூலம் இரண்டு நாள்களில் மட்டும் இரயில்வேக்கு ரூ.5½ இலட்சம் வருவாய் கிடைத்துள்ளது.
தமிழகத்தில் பள்ளிகளுக்கு கோடை கால விடுமுறை விடப்பட்டுள்ளதால் மக்கள் பலர் வெளியூர்களுக்கு குடும்பத்துடன் சென்று விடுமுறையை கொண்டாடி வருகின்றனர். குழந்தைகளை அழைத்துக்கொண்டு சுற்றுலா செல்கின்றனர். இவ்வாறு செல்லும் நபர்கள் பெரும்பாலும் இரயில் பயணத்தை மேற்கொள்கின்றனர்.
பேருந்து கட்டணத்தை விட இரயில் டிக்கெட் கட்டணம் குறைவாக இருப்பதால் குடும்பத்துடன் செல்வதற்கு இரயில் போக்குவரத்தை நாடுகின்றனர். இதனால் இரயில்களில் தற்போது பயணிகள் கூட்டம் அதிகமாக காணப்படுகிறது.
கரூர் வழியாக இயக்கப்படும் கோவை - நாகர்கோவில், ஈரோடு - நெல்லை, திருச்சி - சேலம் உள்ளிட்ட பயணிகள் இரயில்கள் மற்றும் விரைவு இரயில்களில் கூட்டம் நிரம்பி வழிகிறது.
கரூரில் இருந்து விரைவு இரயில்களில் வெளியூர்களுக்கு செல்லும் நபர்கள் டிக்கெட் முன்பதிவு செய்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. முன்பதிவில்லா டிக்கெட் விற்பனை வழக்கத்தை விட அதிகமாக உள்ளது.
கரூர் இரயில் நிலையத்தில் கடந்த இரண்டு நாள்களில் மட்டும் முன்பதிவு மற்றும் முன்பதிவில்லா டிக்கெட் விற்பனை மூலம் இரயில்வேக்கு ரூ.5½ இலட்சம் வருமானம் கிடைத்துள்ளது என்று அதன் அதிகாரிகள் தெரிவித்தனர்.
கோடை கால விடுமுறை இன்னும் இருப்பதால் சுப முகூர்த்த தினங்கள், சனி, ஞாயிற்றுக் கிழமைகளில் இரயில்களில் கூட்டம் இன்னும் அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கிறார்களாம்.