இந்த வருடம் வங்கிகள் மூலம் ரூ.3800 கோடி கடன் வழங்க இலக்கு - திருவாரூர் ஆட்சியர் அறிவிப்பு...

First Published May 1, 2018, 9:29 AM IST
Highlights
Rs.3800 crores loan from banks in this year - thiruvarur Collector announced


திருவாரூர் 

திருவாரூரில் நடப்பு நிதியாண்டில் வங்கிகள் மூலம் ரூ.3814 கோடியே 32 இலட்சம் கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது என்று மாவட்ட ஆட்சியர் நிர்மல்ராஜ் அறிவித்துள்ளார்.

திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வங்கியாளர் கூட்டம் நடந்தது. இந்தக் கூட்டத்திற்கு மாவட்ட ஆட்சியர் நிர்மல்ராஜ் தலைமை வகித்தார். அப்போது வங்கியாளர்கள் மற்றும் பிற துறையினர் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்து ஆய்வு செய்தார். 

அதனைத் தொடர்ந்து நடப்பு ஆண்டில் திருவாரூர் மாவட்டத்தில் வங்கிகள் மூலம் வழங்கப்படும் கடன் திட்ட அறிக்கையை வெளியிட்டு பேசினார். 

அப்போது அவர், "திருவாரூர் மாவட்டத்தில் 2018-19 நடப்பு நிதி ஆண்டில் வங்கி கடன் இலக்கு ரூ.3814 கோடியே 32 இலட்சம் வழங்க நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 

இதில் 64 சதவீதம் பெரும் பங்குகள் விவசாயத்திற்காக ரூ.2453 கோடியே 16 இலட்சம் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. 

சிறு, குறு தொழில்களுக்கு ரூ.640 கோடியே 51 இலட்சமும், மற்ற கடன்களுக்காக ரூ.720 கோடியே 65 இலட்சமும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 

இந்த ஆண்டு கடன் இலக்கை அடைய வங்கியாளர்கள் அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். 

விவசாயம் மற்றும் விவசாயம் சார்ந்த தொழில்கள் அபிவிருத்தி பெற கடன் வசதியை காலம் தாழ்த்தாமல் வழங்க வேண்டும்" என்று அவர் தெரிவித்தார்.

இந்தக் கூட்டத்தில் இந்தியன் ஒவர்சீஸ் வங்கியின் முதுநிலை மண்டல மேலாளர் முருகன், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் எழிலரசன், ரிசர்வ் வங்கி உதவி பொது மேலாளர் பாலாஜி, நபார்டு வங்கி வளர்ச்சி மேலாளர் பெட்ரிக் ஜாஸ்பர் உள்பட துறை அலுவலர்கள் பங்கேற்றனர். 
 

click me!