
திருவாரூர்
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று திருவாரூரில் கிறிஸ்துவ அமைப்பினர் பேரணியிலும், விவசாயிகள் மற்றும் மக்கள் உண்ணாவிரதப் போராட்டத்திலும் ஈடுபட்டனர்.
திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி அருகேயுள்ள தென்பரை கிராமத்தில் "காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும்" என்று மத்திய அரசை வலியுறுத்தி விவசாயிகள் மற்றும் மக்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தென்பரை பிரதான சாலையில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளி அருகே நடைபெற்ற இந்த போராட்டத்துக்கு நீர் பாசனக் கமிட்டி பொருளாளர் சா.கண்ணதாசன் தலைமை வகித்தார்.
காவிரி உரிமை மீட்புக் குழு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் மருத்துவர் இலரா.பாரதிச்செல்வம், திருமேணி ஏரி பாசன விவசாயிகள் சங்க நிர்வாகி கலைவாணி மோகன் ஆகியோர் வாழ்த்தி பேசினர்.
இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் தென்பரை ஊராட்சிக்குள்பட்ட விவசாயிகள், மக்கள் திரளாக பங்கேற்று தங்களது கோரிக்கைக்கு வலு சேர்த்தனர்.
அதேபோன்று, காவிரி மேலாண்மை வாரிய விவகாரத்தில் மத்திய, மாநில அரசைக் கண்டித்து, மன்னார்குடியில் கிறிஸ்தவ அமைப்பின் சார்பில் கண்டன பேரணி நடைபெற்றது.
மார்டன்நகரில் உள்ள அற்புதக் குழந்தை இயேசு திருத்தலத்திலிருந்து தொடங்கியப் பேரணிக்கு, பங்கு தந்தை அருள்ராஜ் தலைமை வகித்தார்.
பின்னர் ருக்மணி பாளையம், தேரடி, மேலராஜவீதி, பெரியக்கடைத் தெரு, காந்திஜி சாலை, வ.உ.சி. சாலை வழியாகச் சென்று, வருவாய்க் கோட்டாட்சியர் அலுவலகம் அருகே பேரணி நிறைவடைந்தது.
இதில், மன்னார்குடி அற்புதக் குழந்தை இயேசு திருத்தலம், புனித சூசையப்பர் ஆலயம், ஆதிச்சபுரம் புனித அந்தோணியார் ஆலையத்தைச் சேர்ந்தவர்கள், கையில் கோரிக்கை வாசகங்கள் அடங்கிய தட்டிகளை ஏந்தியபடி ஊர்வலத்தில் பங்கேற்றனர்.