
திருநெல்வேலி
இலவச மற்றும் கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் படி சி.பி.எஸ்.இ. உள்ளிட்ட அனைத்து தனியார் பள்ளிக்கூடங்களும் 25 சதவீத மாணவர் சேர்க்கையை உறுதிப்படுத்த வேண்டும் என்று திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரியிடம் மக்கள் கோரிக்கை விடுத்தனர்.
திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள வளர்ச்சிமன்ற கூட்டரங்கத்தில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடந்தது. இதற்கு ஆட்சியர் சந்தீப் நந்தூரி தலைமை தாங்கினார். அவர், மக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை வாங்கினார்.
அப்போது, ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான மக்கள் இயக்கத்தைச் சேர்ந்த அப்துல்ஜப்பார், ஜெபசிங், உஸ்மான்கான், பிரிட்டோ, அலாவுதீன் உள்ளிட்டோர் ஆட்சியர் அலுவலகத்திற்கு திரண்டு வந்தனர்.
அவர்கள் ஆட்சியரை சந்தித்து ஒரு கோரிக்கை மனு கொடுத்தனர். அந்த மனுவில், “தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையில் வெளியேறும் புகையால் சுற்று சூழல் பாதிக்கப்படுகிறது. இதனால் சுற்றுப்புற கிராமத்தை சேர்ந்த பொதுமக்களுக்கு சுகாதார சீர்கேடு ஏற்பட்டு உள்ளது. இந்த ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும்“ என்று கூறப்பட்டு இருந்தது.
சட்ட பஞ்சாயத்து இயக்க நெல்லை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் அப்துல் சுக்கூர் ரகுமான் ஆட்சியரிடம் கொடுத்த மனுவில், “இலவச மற்றும் கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் படி சி.பி.எஸ்.இ. உள்ளிட்ட அனைத்து தனியார் பள்ளிக்கூடங்களும் 25 சதவீத மாணவர் சேர்க்கையை உறுதிப்படுத்த வேண்டும். அதற்கு தாங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்“ என்று கூறப்பட்டு இருந்தது.