முறையான ஆவணங்கள் இல்லாமல் வெளிநாடுகளுக்கு கடத்த முயன்ற ரூ.36 இலட்சம் வெளிநாட்டு பணம் பறிமுதல்…

First Published Jun 6, 2017, 10:18 AM IST
Highlights
Rs.36 lakhs worth of foreign money smuggled without proper documents


திருச்சி

முறையான ஆவணங்கள் இல்லாமல் திருச்சி விமான நிலையத்தில் இருந்து வெளிநாட்டிற்கு கடத்த முயன்ற ரூ.36.55 இலட்சம் மதிப்புள்ள வெளிநாட்டுப் பணத்தை சுங்கத் துறையினர் பறிமுதல் செய்தனர்.

திருச்சியிலிருந்து நேற்று காலை 5.25 மணிக்கு சார்ஜா செல்ல ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் புறப்படத் தயாராக இருந்தது.

அப்போது சுங்கத்துறையினர், ஒவ்வொரு பயணிகளிடம் வழக்கம்ம்போல சோதனை நடத்தினர். அப்போது சென்னையைச் சேர்ந்த அப்பாஸ் வகாபுதின் என்பவரின் உடமைகளில் பழைய செய்தித்தாள்களில் சுற்றிய பொட்டலம் ஒன்று இருந்தது. சந்தேகத்தின் பேரில் சுங்கத் துறையினர் அதனை பரிசோதித்தனர்.

அதில் இந்திய மதிப்பில் ரூ. 10.75 இலட்சம் வெளிநாட்டு பணம் இருந்தது தெரியவந்தது. அவற்றை சுங்கத்துறையினர் பறிமுதல் செய்தனர்.

அதேபோல, சென்னையைச் சேர்ந்த, அப்துல்ஹக் என்பவரிடமிருந்து ரூ.18.30 இலட்சம் வெளிநாட்டு பணமும், திருச்சியைச் சேர்ந்த ரியாஸ்கான் என்பவரின் டிராலி பையில் மறைத்து வைத்திருந்த ரூ.7.50 இலட்சம் வெளிநாட்டு பணமும் பறிமுதல் செய்யப்பட்டன.

இதில், அமெரிக்க - டாலர், ஆஸ்திரேலிய - டாலர், இங்கிலாந்து - பௌண்டு, சௌதி ரியால், அரபு நாடுகள் - திர்ஹாம், ஓமன் - ரியால்ஸ் உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் பணங்கள் இருந்தன.

இவற்றை முறையான அனுமதிப் பெறாமலும், ஆவணங்கள் ஏதுமின்றியும் கடத்திச் செல்ல இருந்தது தெரியவந்தது.

இதுகுறித்து சுங்கத் துறையினர் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

click me!