நீதிமன்ற வளாகத்தில் ரூ.27½ இலட்சத்தில் மருத்துவமனை - தலைமை குற்றவியல் நீதிபதி அறிவிப்பு...

First Published Feb 13, 2018, 7:22 AM IST
Highlights
Rs.27 lakhs worth Hospital in Courtroom Chief Criminal Judge Announces


திருவண்ணாமலை

திருவண்ணாமலை மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் ரூ.27½ இலட்சத்தில் மருத்துவமனை கட்டப்பட இருக்கிறது என்றும் இன்னும் 10 நாள்களில் இதற்கான பணிகள் தொடங்கும் என்றும் தலைமை குற்றவியல் நீதிபதி நாராஜா அறிவித்துள்ளார்.

திருவண்ணாமலை மாவட்ட நீதிமன்றத்திற்கு நாள்தோறும் ஏராளமானோர் வந்து செல்வது வழக்கம். மேலும், தற்போது நீதிமன்ற வளாகத்தில் தபால் நிலையம் செயல்பட்டு வருகிறது.

இந்த நிலையில் நேற்று திருவண்ணாமலை நீதிமன்ற வளாகத்தில் இருந்து 108 அவசர ஊர்தி சேவை தொடங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட நீதிபதி மகிழேந்தி தலைமை வகித்தார்.

இதில், மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பு நீதிபதி ராஜ்மோகன், தலைமை குற்றவியல் நீதிபதி நாராஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் நீதிமன்ற ஊழியர்கள், வக்கீல்கள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்றனர்.

இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட தலைமை குற்றவியல் நீதிபதி நாராஜா, "திருவண்ணாமலை மாவட்ட நீதிமன்றத்திற்கு தினமும் ஏராளமான மக்கள் வந்து செல்கின்றனர். அதுமட்டுமின்றி, இங்கு மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு அலுவலகம், தபால் நிலையம் செயல்படுகின்றனர்.

இங்கு வரும் மக்களுக்கு திடீரென உடல்நலம் பாதிக்கப்பட்டால் அவர்களுக்கு உதவும் வகையில் நீதிமன்ற வளாகத்தில் இருந்தே இயங்கும் வகையில் 108 அவசர ஊர்தி சேவை தொடங்கப்பட்டுள்ளது.

மேலும், திருவண்ணாமலை மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் ரூ.27½ இலட்சத்தில் மருத்துவமனை கட்ட சுகாதாரத்துறை சார்பில் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்தப் பணி இன்னும் 10 அல்லது 15 நாள்களில் தொடங்கப்படவுள்ளது.

இந்த மருத்துவமனையில் புறநோயாளிகள் பிரிவு, அவசர சிகிச்சை பிரிவு, இரத்த பரிசோதனை நிலையம் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகள் கொண்டதாக இந்த மருத்துவமனை அமைய உள்ளது.

இந்த மருத்துவமனையின் மூலம் சுற்றவட்டார பகுதியில் உள்ள பொதுமக்கள், நீதிமன்ற ஊழியர்கள் பயன் பெறலாம்" என்று அவர் தெரிவித்தார்.  

 

click me!