பிரதமர் நகர்ப்புற வீடுகட்டும் திட்டம்: தமிழகத்துக்கு ரூ.1906 கோடி பாக்கி!

By Manikanda Prabu  |  First Published Dec 15, 2023, 5:16 PM IST

பிரதமர் நகர்ப்புற வீடுகட்டும் திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டுக்கு ஒதுக்கியதில் இன்னும் ரூ.1906.59 கோடி மத்திய அரசால் விடுக்கப்பட வேண்டும் என நாடாளுமன்றத்தில் அளித்துள்ள தகவல் மூலம் தெரியவந்துள்ளது


நாடாளுமன்ற மக்களவையில், “பண வீக்கத்துக்கு ஏற்ப பிரதமர் நகர்ப்புற வீடுகட்டும் திட்டத்தில் ஒரு வீட்டுக்கு நிர்ணயிக்கப்படும் தொகையை உயர்த்தி வழங்கும் திட்டம் உள்ளதா?; 2015-16 முதல் 2021-22 வரை இந்தத் திட்டத்தின்கீழ் தமிழ்நாட்டுக்கு ஒதுக்கப்பட்ட நிதி எவ்வளவு?” ஆகிய கேள்விகளை விழுப்புரம் எம்.பி ரவிக்குமார் எழுப்பியிருந்தார்.

அதற்குப் பதிலளித்த வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற மேம்பாட்டுத்துறை இணை அமைச்சர் கௌஷல் கிஷோர், “மத்திய உதவியாக இந்திய அரசு இரு குறிப்பிட்ட தொகையை வழங்குகிறது. ISSR இன் கீழ் ஒரு வீட்டிற்கு ரூ.1 லட்சம், AHP இன் கீழ் ஒரு வீட்டிற்கு ரூ.1.5 லட்சம், பிரதமர் நகர்ப்புற வீடுகட்டும் திட்டத்தில் மீதமுள்ள தொகை மாநில அரசுகளாலும், பயனாளிகளாலும் அளிக்கப்படுகிறது. 2022 ஆம் ஆண்டு வரை இருந்த இந்தத் திட்டம் இப்போது 2024 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. வீட்டுக்கான யூனிட் காஸ்ட்டை உயர்த்தும் திட்டம் அரசுக்கு இல்லை.” என தெரிவித்துள்ளார்.

Tap to resize

Latest Videos

இந்தத் திட்டத்துக்கென  2015-16 முதல் 2022ஆம் ஆண்டு வரை தமிழ்நாட்டுக்கு மொத்தம் ரூ.8516.33 கோடி அளிக்கப்பட்டுள்ளது எனவும் அமைச்சர் கூறியுள்ளார்.

இதுகுறித்து ரவிக்குமார் எம்.பி. கூறுகையில், “அமைச்சர் அளித்த விவரத்தில் பல ஆண்டுகளில் ஒதுக்கீடு செய்யப்பட்ட தொகையில் பாதி அளவே விடுவிக்கப்பட்டிருப்பது தெரிகிறது. 2015-16 இல் ரூ.548.21 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு ரூ.129.35 கோடிதான் விடுவிக்கப்பட்டுள்ளது. 2016-17 இல் ஒதுக்கீடு செய்தது ரூ.1,424.58 கோடி, விடுவித்ததோ ரூ.637.75 கோடிதான். 2017-18 இல் ஒதுக்கியது ரூ.1,723.11 கோடி, ஆனால் விடுவித்தது ரூ.1,194.00 கோடி மட்டுமே. 2018-19 இல் தமிழ்நாட்டுக்கு ஒதுக்கியது ரூ.2084.89 கோடி, விடுவித்தது ரூ.1408.78 கோடி மட்டும்தான்.

அயோத்தி விமான நிலையம்: டிச.,30இல் தரையிரங்கும் முதல் விமானம் - முழு விவரம்!

இந்த நான்கு ஆண்டுகளில் பிரதமர் நகர்ப்புற வீடுகட்டும் திட்டத்துக்கு ( PMAY-U) தமிழ்நாட்டுக்கு மொத்தமாக ஒதுக்கிய தொகை ரூ.5780.79 கோடி ரூபாய். அதில் விடுவித்தது ரூ.3366.88 கோடி மட்டுமே. ஒதுக்கீடு செய்ததில் ரூ.2413.91 கோடியை ஒன்றிய அரசு விடுவிக்கவில்லை. தமிழ்நாடு அரசு தொடர்ந்து வலியுறுத்தியதால் 2019-20 இல் ரூ.189.46 கோடியும், 2020-21 இல் ரூ.103.60 கோடியும்; 2021-22 இல் ரூ.214.26 கோடியும் தர வேண்டிய பாக்கியிலிருந்து ஒன்றிய அரசால் விடுவிக்கப்பட்டது. இன்னும் ரூ.1906.59 கோடி தமிழ்நாட்டுக்கு ஒன்றிய அரசு கொடுக்க வேண்டியுள்ளது. இவ்வாறு பாக்கி வைப்பதால் ஒதுக்கீடு செய்யப்பட்ட வீடுகளைக் கட்டி முடிக்க முடியாத நிலை உள்ளது.” என்று தெரிவித்துள்ளார்.

click me!