துரும்பை கூட கிள்ளிபோடாத இபிஎஸ்! யோக்கியன் நாடகம் போட்டால் மக்கள் ஏமார்ந்து விடுவார்களா? ஆர்.எஸ்.பாரதி விளாசல்

Published : Dec 15, 2024, 03:58 PM ISTUpdated : Dec 15, 2024, 04:04 PM IST
துரும்பை கூட கிள்ளிபோடாத இபிஎஸ்! யோக்கியன் நாடகம் போட்டால் மக்கள் ஏமார்ந்து விடுவார்களா? ஆர்.எஸ்.பாரதி விளாசல்

சுருக்கம்

அதிமுகவின் சமீபத்திய கண்டனத் தீர்மானங்களுக்கு திமுக அமைச்சர் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். பெஞ்சால் புயல் நிவாரணம், சொத்து வரி உயர்வு, டங்ஸ்டன் சுரங்கம் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களில் அதிமுகவின் செயல்பாடுகளை விமர்சித்துள்ளார்.

இதுதொடர்பாக திமுக அமைச்சர் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி வெளியிட்டுள்ள அறிக்கையில்: இன்று நடைபெற்ற அதிமுக செயற்குழு மற்றும் பொதுக்குழுவில்,  முதலமைச்சர் தலைமையிலே நல்லாட்சி வழங்கிவரும் திமுக ஆட்சியின் மீது சில கண்டனத்தீர்மானங்களை நிறைவேற்றி அதன் மூலம் களங்கம் சுமத்திடலாம் என கற்பனைக் கோட்டை கட்டியிருக்கிறார் எடப்பாடி பழனிசாமி. 

பொதுக்குழுவை கூட்டி விட்டோமே தீர்மானத்திற்கு என்ன செய்வது, எங்கே போவது, குறையின்றி நடந்துவரும் திமுக அரசு மீது எதைச் சொல்லி பழி போடுவது என தெரியாமல் இட்டுக்கட்டிய பொய்களை எழுதி நிரப்பி கண்டன தீர்மானம் என கதை கட்டியிருக்கிறார் ‘கட்டுக்கதை’ பழனிசாமி. இந்திய வானிலை ஆய்வுமையத்தாலேயே கூட சரிவர கணிக்கமுடியாத பெஞ்சால் புயலால் எதிர்பார்க்காத அளவு, எதிர்பார்க்காத இடங்களில் அதி கன மழை பெய்த போதும் முதலமைச்சரின் உத்தரவின் பேரில் எடுக்கப்பட்ட முன் எச்சரிக்கை நடவடிக்கைகளால் தமிழ்நாட்டு மக்களுக்கு பெரும் சேதம் ஏற்படாமல் தடுக்கப்பட்டது. 

இதையும் படிங்க: TN Heavy Rain: இன்னும் 2 நாட்கள் தான்! தமிழகத்தில் தரமான சம்பவம் காத்திருக்கு! வானிலை மையம் டேஞ்சர் அலர்ட்!

பெஞ்சால் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு முதலமைச்சர் உடனடியாக நிவாரணம் அறிவிக்கப்பட்டு தற்போது வழங்கப்பட்டு வருகிறது. அதோடு மழைக்காலத்திற்கு முன்பாகவே 12.06.2024 ல் முதலமைச்சரின் உத்தரவின் பேரில்  நீர்வளத்துறை, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறைக்கு உட்பட்ட ஏரி, குளம், கண்மாய்களில் குடிமராமத்துப் பணிகள் சிறப்பாக மேற்கொள்ளப்பட்டு ஏரி, குளம் , கண்மாய்கள் தூர்வாரப்பட்டு ஆழப்படுத்தியதன் விளைவாகத் தான் பெஞ்சால் புயல் பெருமழையின் போதும், அதன் பின் அடுத்தடுத்து அதி கனமழை பெய்த போதும் ஏரி, குளங்களில் நீர் தக்க வகையில் தேங்கி மழை நீர் வீணாவது தடுக்கப்பட்டுள்ளது. 
 
கடந்தகால நிர்வாகத்திறனற்ற அதிமுக ஆட்சியில் புயலின் போது பெருத்த உயிர் சேதம், பொருட்சேதம் ஏற்பட்டதை போல தற்போதைய திமுக ஆட்சியிலும் நடக்கும் என எண்ணி ஏமாந்து போன பழனிசாமி தற்போது கண்டன தீர்மானமாவது நிறைவேற்றுவோம் என நிறைவேற்றி இருக்கிறார். ஒன்றிய பாஜக  அரசோடு கூடிக்குலாவி கூட்டணியில் இருந்த காலத்தில் 15 வது நிதி ஆணையம் தெரிவித்த வரி உயர்வை கட்டாயமாக கடைபிடிக்க வேண்டும் என்ற கட்டளையை, சிரம் ஏற்று ‘சரி’ என தலையாட்டி தமிழ்நாட்டு மக்களுக்கு துரோகம் செய்துவிட்டு தற்போது சொத்துவரி பற்றி நீலிகண்ணீர் வடித்து நடித்துள்ளார் சொத்துவரி உயர்வுக்கு காரணமான பழனிசாமி. 

தூத்துக்குடி துப்பாக்கி சூடு, சாத்தான் குளம் தந்தை மகன் கொலை, பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமைகள் என கொலை கொள்ளை பாலியல் குற்றங்கள் பசிபிக் கடலளவு பெருகிக் கிடந்த அலங்கோல ஆட்சி நடத்திய பழனிசாமி தற்போது குற்றங்களை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கி மக்களை காத்துவரும் திமுக ஆட்சி மீது சுண்டுவிரலை நீட்டிக்கூட பேச தகுதியில்லை.

ஒன்றிய அரசு கொண்டுவந்து நிறைவேற்றிய ஒன்றிய அரசு தனித்து ஏலம் விடும் அதிகார சட்ட திருத்தத்தை வாயாரப் புகழ்ந்து , வானளவு வாழ்த்தி நெடுஞ்சாண் கிடையாக விழுந்து ஆதரித்து, தமிழ்நாட்டு மக்களின் உரிமைகளை அடமானம் வைத்துவிட்டு தற்போது அது வெளிப்பட்ட உடன் என்ன செய்வதென்று தெரியாமல் திமுக மீது கண்டன தீர்மானம் நிறைவேற்றும் நாடகத்தை நடத்தி உள்ளார். டங்ஸ்டன் சுரங்கத்துக்கான அனுமதியை கொடுக்க காரணமே அடிமை அதிமுக ஆட்சிதான். 2019 ஆம் ஆண்டு அதிமுக ஆட்சியில் மதுரை மேலூர் பகுதியில் இரவோடு இரவாக  நடத்தப்பட்ட ஆய்வின் அடிப்படையில் தான் அங்கு டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க ஒன்றிய அரசு முடிவு செய்து ஏலம் விட்டுள்ளது.

இஸ்லாமிய மக்களை இரண்டாந்தர குடிமக்களாக்க முயற்சிக்கும் குடியுரிமை சட்டம் (CAA) நிறைவேறக்காரணமாக இருந்த அடிமை அதிமுக, தற்போதும் கூட இஸ்லாமிய சமூக மக்களை அவதூறாக பேசிய நீதிபதிக்கு ஆதரவாக செயல்பட்டு சிறுபான்மை மக்களுக்கு துரோகம் செய்துவரும் அடிமை அதிமுக  இன்று இஸ்லாமிய சிறைக்கைதிகள் விடுவிப்பு பற்றி பேசுவது வேடிக்கை. அதிர்ஷடத்தின் வழியில் ஆட்சியில் அமர்ந்த எடப்பாடி பழனிச்சாமி மதவாத சக்திகளோடு கைர்கோர்த்து  சிறுபான்மை மக்களின் உரிமையை அடமானம் வைத்துவிட்டு, தனது ஆட்சிக்காலத்தில் சிறையில் வாடும் இஸ்லாமிய மக்களை விடுவிக்க சிறு துரும்பை கூட கிள்ளிபோடாத பழனிச்சாமி தற்போது யோக்கியன் நாடகம் போட்டால் மக்கள் ஏமார்ந்து விடுவார்களா என்ன?  

தற்போதும் கூட மறைமுகமாக மதவாத பாஜகவோடு கள்ள உறவில் கைகோர்த்து இருக்கும் பழனிசாமி, ஒன்றிய அரசின் மக்கள் விரோத செயலை கண்டித்து ஒரு வார்த்தை கூட உச்சரிக்கவில்லை; தீர்மானங்களில் கூட பாஜகவுக்கு வலிக்காத வகையில் வலியுறுத்தல் தான். ஆனால் சிறப்பாக செயல்பட்டுவரும் தமிழ்நாடு அரசுக்கு கண்டனமாம். இப்படி கபட வேடம் பூண்டிருக்கும் பழனிசாமி என்றுமே சிறுபான்மை மக்களின் அரணாக நிற்கும் திமுக ஆட்சியை குறை கூறினால் மக்கள் நம்பிவிடுவார்களா என்ன?

நிர்வாகத்திறனற்ற பத்தாண்டுகால அதிமுக ஆட்சியில் நசிவுற்ற அரசு மற்றும் தனியார் தொழில் நிறுவனங்கள் திராவிட மாடல் விடியல் ஆட்சியில் மேம்பட்டிருக்கின்றன. உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடத்தியதன் மூலமும், முதலமைச்சரே துபாய், சிங்கப்பூர், ஜப்பான், அமெரிக்கா போன்ற நாடுகளுக்கு நேரடியாக சென்று முதலீடுகளை திரட்டியதன் விளைவாகவும் தமிழ்நாட்டில் பெரும் நிறுவனங்கள் தொழில் தொடங்கி அதன் மூலம் வேலைவாய்ப்புகள் அதிகரித்து வருகின்றன. அதன் காரணமாக இந்தியாவிலேயே அதிக வேலையாப்பினை உருவாக்கி வளர்ச்சிப்பாதையில் முன்னணியில் இருக்கும் மாநிலமாக தமிழ்நாடு உயர்ந்துள்ளது. 

இதையும் படிங்க: EVKS Elangovan: கடந்த ஆண்டு மகன்! இந்த ஆண்டு தந்தை! காவு வாங்கும் ஈரோடு கிழக்கு தொகுதி!

அதோடு முதலமைச்சர் பெண்கள் முன்னேற்றத்திற்காக மேற்கொண்ட சீரிய நடவடிக்கைகளால் இன்று பெண்கள் வேலைக்கு செல்லும் விகிதத்திலும், சுயசார்பு நிலையிலும் தமிழ்நாடு தான் இந்தியாவிலேயே முதலாவதாக உள்ளது. அடிமை அதிமுக ஆட்சியில் இருள் சூழ்ந்து கிடந்த தமிழ்நாடு திராவிட மாடல் நல்லாட்சியில் ஒளி வீசுயபடி வளர்ந்துவருகிறது. தமிழ்நாட்டு மக்களின் நலனே முக்கியம் என முதலமைச்சர் தலைமையிலே சிறப்பாக நடந்துவரும் திராவிடமாடல் ஆட்சி மீது அள்ளிவிடும் அதிமுகவின் கண்துடைப்பு கண்டனக்கதைகளை தமிழ்நாட்டு மக்கள் துளியும் நம்ப போவதல்லை; கட்டுக்கதை பழனிசாமியின் துரோகத்தையும் மறக்கப்போவது இல்லை என ஆர்.எஸ்.பாரதி ஆவேசமாக தெரிவித்துள்ளார். 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

TVK Vijay | மீண்டும் தொடங்கும் விஜய் ஆட்டம்.! தளபதியின் தலைமையின் கீழ் மாறும் தமிழக அரசியல்.!
அமைச்சர் கே.என். நேரு வழக்கில் திடீர் திருப்பம்.. அதிர்ச்சி கொடுத்த சென்னை உயர்நீதிமன்றம்!