தி.மு.க. அரசின் சாதனைகளைப் பொறுத்துக் கொள்ள முடியாமல் எடப்பாடி பழனிசாமி பொய்ப்பிரச்சாரம் செய்வதாக அக்கட்சியின் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கண்டனம் தெரிவித்துள்ளார்
திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கடலுார் மாவட்ட தி.மு.க. அலுவகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “தமிழ்நாட்டில் போதைப்பொருள் நடமாட்டம் அதிகம் உள்ளது போல, எடப்பாடி பழனிசாமி பொய்ப் பிரச்சாரம் செய்து வருகிறார். தங்களது கூட்டணிப் பிரச்சினைகளைக் கையாள முடியாமல், யார் வருவார் எனக் காத்திருக்கும் அவர், தி.மு.க. மீது அவதூறுகளைப் பேசி வருகிறார்.” என குற்றம் சாட்டினார்.
“தமிழ்நாட்டின் நிதிநிலை அறிக்கையை அனைத்துத் தரப்பினரும் மனதார பாராட்டி உள்ளனர். இதனைத் தாங்கிக் கொள்ள முடியாமல், எடப்பாடி பழனிசாமி ஆர்ப்பாட்டம் நடத்துகிறார். நாட்டிலேயே, முதன்மை மாநிலமாகத் தமிழ்நாடு திகழ்வதை அவர்களால் ஏற்க முடியவில்லை.” என ஆர்.எஸ்.பாரதி கண்டனம் தெரிவித்தார்.
undefined
அண்ணாமலை ஏதோ தமிழ்நாட்டில்தான் போதைப் பொருள் அதிகம் இருப்பது போல பேசுவதாக தெரிவித்த ஆர்.எஸ்.பாரதி, “இந்தியாவிலேயே அதிகமான போதைப் பொருள் கைப்பற்றப்பட்ட மாநிலம் குஜராத். அதானிக்குச் சொந்தமான துறைமுகத்தில்தான் இந்தியாவினுடைய மொத்த போதைப் பொருள் கடத்தலும் நடக்கிறது என்று அனைத்துத் தரப்பினரும் கூறுகிறார்கள். இந்தியா முழுக்கப் போதைப் பொருள் பரவலுக்குக் காரணம் பாஜ.க.தான். போதைப் பொருள் விற்பனையில் பா.ஜ.க. தலைவர்கள் பட்டியல் என்னிடத்தில் இருக்கிறது. பஞ்சாப் - ஷோன்தி (23 கிலோ ஹெராயின் வழக்கு) இவர் 12 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்றவர். அவரை அமித்ஷா கட்சியில் சேர்க்கிறார். அதேபோல பா.ஜ.க. எம்.பி.,யின் மகன் போதை பொருள் விற்பனையில் ஈடுபட்டு இருந்தும் எந்த நடவடிக்கையும் இல்லை. இந்தச் சூழலில் எடப்பாடி பழனிசாமி, தமிழ்நாடு அரசுக்கு எதிராகப் பேசுவது வேடிக்கையாக இருக்கிறது.” என தெரிவித்தார்
“கட்சியைச் சேர்ந்த ஒருவர், போதைப்பொருள் புழக்கம் தொடர்பாகச் செயல்பட்டார் என கேள்விபட்டவுடன், அடுத்த, 24 மணி நேரத்தில் அவரை கட்சியில் இருந்து நீக்கி நடவடிக்கை எடுத்தது தி.மு.க. ஆனால், எடப்பாடி பழனிசாமி அப்படி செய்தாரா?.” என ஆர்.எஸ்.பாரதி கேள்வி எழுப்பினார். கடலுார் எம்.பி., மீது கூட ஒரு வழக்கு வந்தது. அவரையும் கட்சி காப்பாற்றவில்லை. அவர் சட்ட ரீதியாக வழக்கைச் சந்தித்து வருவதாகவும் ஆர்.எஸ்.பாரதி குறிப்பிட்டார்.
மோடி சுட்ட வடைகள்: பொதுமக்களுக்கு வடை வழங்கி திமுக பிரசாரம்!
தொடர்ந்து பேசிய ஆர்.எஸ்.பாரதி, “போதைப்பொருள் கடத்தல் விற்பனையில் ஈடுபடுபவர்கள் ஐ.டி. துறையைச் சார்ந்தவர்கள் என எடப்பாடி பழனிசாமி கூறுகிறார். அந்தத் துறையில் தமிழ்நாட்டில் இருந்து சென்று உலகம் முழுவதும் சிறப்பாகப் பலர் செயல்பட்டுள்ளனர். அது நமக்குப் பெருமை. ஆனால் அந்தத் துறையைச் சார்ந்தவர்களை எடப்பாடி பழனிசாமி கொச்சைப்படுத்தி குற்றம்சாட்டுகிறார். இந்த விஷயத்தில் எடப்பாடி பழனிசாமி இரண்டு நாட்களுக்குள் மன்னிப்பு கேட்க வேண்டும். இல்லையென்றால், திமுக ஐ.டி. பிரிவு வாயிலாகச் சட்ட நடவடிக்கை எடு்ப்போம்.
தமிழ்நாட்டில் நடைபெறும் ஆட்சி மீது குறை சொல்ல முடியாமல், பிரதமர் மோடி நினைத்ததை எல்லாம் பேசுகிறார். அதற்கு எடப்பாடி பழனிசாமி ஒத்து ஊதுகிறார். 2016 தேர்தலில் கன்டெய்னர் லாரியில் பெரும் பணம் சிக்கியது. தி.மு.க. வழக்குத் தொடுத்தது. அது தொடர்பான சி.பி.ஐ. விசாரணையைத் தொடர்ந்து தாமதப்படுத்துகின்றனர்.” என்றார்.
தேர்தல் நெருங்கும் நிலையில், தி.மு.க. கூட்டணியைச் சிதைக்க முயற்சித்தார்கள்; அது நடக்கவில்லை. கூட்டணி வலுவாகத் தொடர்கிறது. இதனை தாங்கிக் கொள்ள முடியாமல் தவறான பிரச்சாரம் செய்வதாகவும் திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி குற்றம் சாட்டினார். மேலும், நகராட்சித் தேர்தலுக்கு வருவது போல பிரதமர் மோடி அவர்கள் அடிக்கடி தமிழ்நாட்டுக்கு வருகிறார். மழை நிவாரண நிதியை தமிழ்நாட்டிற்கு ஒதுக்கும் அறிவிப்பை இன்று மாலை வெளியிடுவாரா எனப் பார்க்கலாம் எனவும் அவர் கூறினார்.
திமுக கூட்டணி பேச்சுவார்த்தை பற்றிய செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த அவர், “தி.மு.க. கூட்டணியில் பிளவு இல்லை. நாளை மாலைக்குள் கூட்டணி பேச்சுவார்த்தை முடிந்து விடும் என நினைக்கிறேன். 7ஆம் தேதிக்குள் தேர்தலுக்கு முழுமையாக தயாராகி விடுவோம்.” என்றார். இ.வி.எம். இயந்திரத்தில் முறைகேடுகளைத் தடுக்க தேர்தல் ஆணையத்தில் பல புகார்கள் தந்துள்ளதாகவும் ஆர்.எஸ்.பாரதி தெரிவித்தார்.