ரூ.8.33 லட்சம் கோடி கடன் அதிகரிப்புதான் திமுக அரசின் சாதனை: வானதி சீனிவாசன்!

By Manikanda Prabu  |  First Published Feb 19, 2024, 5:57 PM IST

தமிழ்நாட்டின் ஒட்டுமொத்த கடன் ரூ.8.33 லட்சம் கோடியாக அதிகரித்தது தான் திமுக அரசின் சாதனை என பாஜக எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்


நிதியமைச்சர் தங்கம் தென்னரசு 2024-2025 ஆம் ஆண்டிற்கான தமிழக நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்துள்ளார். தமிழ்நாட்டின் பட்ஜெட்டிற்கு கலவையான விமர்சனங்கள் வந்து கொண்டிருக்கின்றன. அந்த வகையில், தமிழ்நாட்டின் ஒட்டுமொத்த கடன் ரூ.8.33 லட்சம் கோடியாக அதிகரித்தது தான் திமுக அரசின் சாதனை என பாஜக எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: “2024-25-ம் ஆண்டுக்கான தமிழ்நாடு நிதிநிலை அறிக்கையில், தமிழ்நாட்டின் ஒட்டுமொத்த கடன் ரூ. 8 லட்சத்து 33 ஆயிரத்து 361 கோடியே 80 லட்சம் ரூபாயாக அதிகரித்துள்ளது. இது மாநில மொத்த உற்பத்தி மதிப்பில் 25 சதவீதத்தையும் தாண்டி 26.41 சதவீதமாக அதிகரித்துள்ளது. கடனுக்கு வட்டியாக மட்டும் ரூ. 63 ஆயிரத்து 722 கோடியே 24 லட்சம் செலுத்த வேண்டும். நடப்பு 2024-25-ம் ஆண்டில் ரூ. 1 லட்சத்து 55 ஆயிரத்து 584 கோடியே 48 லட்சம் கடன் வாங்கப் போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. வருவாய் பற்றாக்குறை ரூ. 49 ஆயிரத்து 278 கோடியே 73 லட்சமாக அதிகரித்துள்ளது.

Latest Videos

undefined

நிதிநிலை அறிக்கையில் உள்ள இந்த புள்ளிவிவரங்களைப் பார்க்கும்போது தமிழ்நாட்டின் பொருளாதாரம் சரியான பாதையில் செல்லவில்லை என்பது தெளிவாகத் தெரிகிறது. ஊழல், குடும்ப ஆட்சியே இதற்கு காரணம்.

தமிழ்நாடு அரசுக்கு கிடைக்கும் வருவாயில் பெரும் பகுதியை கோவை உள்ளிட்ட கொங்கு மண்டல மாவட்டங்களில் இருந்தே கிடைக்கிறது. ஆனால், கோவை மெட்ரோ ரயில் திட்டத்தை செயல்படுத்த எந்த உத்தரவாதமான அறிவிப்பும் இல்லை. ஏழை, நடுத்தர மக்களுக்கு வீடு கட்டும் திட்டம், வீடுகளுக்கு குழாய் மூலம் குடிநீர் வழங்கும் திட்டம் என பல்வேறு திட்டங்கல் மத்திய அரசின் திட்டங்கள். அதை தங்களின் சாதனையாக நிதிநிலை அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

ஜார்க்கண்ட்டில் சாதிவாரி கணக்கெடுப்பு: முதல்வர் சம்பய் சோரன் அறிவிப்பு!

வெளிமாநில, வெளிநாட்டு பொருளாதார நிபுணர்களைக் கொண்ட ஆலோசனைக்குழுவை திமுக அரசு அமைத்தது. ஆனாலும், தமிழ்நாடு பொருளாதாரத்தில், நிதி மேலாண்மையில் எந்த முன்னேற்றமும் இல்லை. எனவே, பொருளாதார நிபுணர் குழுவுக்கு எவ்வளவு செலவிடப்பட்டது, அவர்கள் என்ன ஆலோசனை வழங்கினார்கள், அவை செயல்படுத்தப்பட்டதா, அதன் தாக்கம் என்ன என்பது குறித்து நிதியமைச்சர் விளக்கம் அளிக்க வேண்டும். மொத்தத்தில் திமுக அரசின் இந்த நிதிநிதி அறிக்கை வரும் மக்களவைத் தேர்தலை மனதில் கொண்டு, மக்களை ஏமாற்றும் சில அறிவிப்புகளுடன் தயாரிக்கப்பட்டுள்ள அறிக்கை. தமிழ்நாடு மக்களின் நலன். தொலைநோக்கு எதுவும் இல்லை.” இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

click me!