வங்கி ஊழியர்களின் ஒருநாள் போராட்டத்துக்கே ரூ.50 கோடி வர்த்தகம் பாதிப்பு; இது பொள்ளாச்சியில் மட்டும்...

First Published May 31, 2018, 6:28 AM IST
Highlights
Rs 50 crore trade affected in Pollachi by one day bank employees strike


கோயம்புத்தூர்
 
ஊதிய உயர்வு கேட்டு வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். முதல் நாள் போராட்டத்துக்கே பொள்ளாச்சி தாலுகாவில் ரூ.50 கோடி வர்த்தகம் பாதிக்கப்பட்டு உள்ளது.

வங்கி நிர்வாகம் மற்றும் வங்கி தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு இடையேயான ஊதிய உயர்வு தொடர்பாக பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில் இரண்டு சதவீத ஊதிய  உயர்வை முன் வைத்தது வங்கி நிர்வாகம்.

இதனை ஏற்றுக் கொள்ளாத தொழிற்சங்கங்கள் மே மாதம் 30, 31-ஆம் தேதிகளில் அகில இந்திய அளவில் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவதாக அறிவித்தன.

இதனைத் தொடர்ந்து, "பேச்சுவார்த்தையை துரிதப்படுத்தி நியாயமான ஊதிய உயர்வு வழங்கவும், 

ஊதிய உயர்வு உடன்படிக்கையில் அனைத்து அலுவலர்களையும் உட்படுத்த வேண்டும்" போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் நேற்று வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனையொட்டி கோயம்புத்தூர் மாவட்டம், பொள்ளாச்சி தாலுகா வங்கி ஊழியர்கள் சங்கம் சார்பில் காந்தி சிலை அருகில் உள்ள பாரத ஸ்டேட் வங்கி முன் நேற்று காலை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு செயலாளர் ஜெயபிரகாஷ் தலைமை வகித்தார். உறுப்பினர் பழனிசாமி முன்னிலை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

இதில் வங்கி ஊழியர்கள் சங்க நிர்வாகிகள் உள்பட பலர் பங்கேற்றனர். ஆர்ப்பாட்டத்தின் முடிவில் சங்க துணை தலைவர் பாலசுப்பிரமணியம் நன்றி தெரிவித்தார். 

பொள்ளாச்சியில் வங்கி ஊழியர்களின் வேலை நிறுத்தம் காரணமாக வங்கிகள் மூடப்பட்டிருந்தது. மேலும், ஒரு சில ஏ.டி.எம். மையங்களும் பணம் இல்லாமல் மூடப்பட்டு இருந்ததால் மக்கள் மிகவும் அவதிப்பட்டனர். 

இதுகுறித்து வங்கி ஊழியர்கள் சங்க நிர்வாகிகள், "ஊதிய உயர்வு உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர். இதனால் வங்கி பணிகள் முற்றிலும் பாதிக்கப்பட்டது. 

காசோலை பரிவர்த்தனை, பணப்பட்டுவாடா உள்பட பல்வேறு பரிமாற்றங்கள் பாதிக்கப்பட்டன. பொள்ளாச்சி தாலுகாவில் 28 வங்கிகள் உள்ளன. 

இந்த வங்கிகளில் பணிபுரியும் 400-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளதால் பொள்ளாச்சி தாலுகாவில் ரூ.50 கோடி வரை வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது" என்று அவர்கள் தெரிவித்தனர். 
 

click me!