தேங்காய் வியாபாரியிடம் நூதன முறையில் ரூ.5 இலட்சம் கொள்ளை; உஷார் மக்களே இப்படி கூட பணத்தை திருடுறாங்க! 

First Published Mar 15, 2018, 10:39 AM IST
Highlights
Rs 5 lakhs theft form coconut business men be careful people steal money in this way too


புதுக்கோட்டை

வங்கியில் இருந்து ரூ.5 இலட்சத்தை எடுத்துக் கொண்டு மோட்டார் சைக்கிளில் வந்த தேங்காய் வியாபாரியிடம் நூதன முறையில் பணத்தை திருடிய மூவரை காவலாளர்கள் கைது செய்தனர். கொள்ளையில் தொடர்புடைய மேலும் இருவரை காவலாளர்கள் வலைவீசி தேடி வருகின்றனர்.

புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி அருகே உள்ள மஞ்சக்கரையை சேர்ந்தவர் ரவி (48). தேங்காய் வியாபாரியான இவர் கடந்த மாதம் 12-ஆம் தேதி அறந்தாங்கியில் உள்ள ஒரு வங்கியில் இருந்து ரூ.5 இலட்சத்தை எடுத்துக் கொண்டு, மோட்டார் சைக்கிளில் ஆண்டாக்கோட்டை வழியாக ஊருக்கு சென்றுக்கொண்டு இருந்தார்.

இரத்தினகோட்டை அருகே சென்றபோது, பின்னால் இரண்டு மோட்டார் சைக்கிள்களில் வந்த அடையாளம் தெரியாத மர்மநபர்கள், தாங்கள் வைத்திருந்த 100 ரூபாய் நோட்டுகளை கீழே வீசிவிட்டு, ரவிக்கு முன்னால் சென்று, அண்ணா உங்கள் பணம் கீழே விழுந்துவிட்டது என்று கூறியுள்ளனர். 

இதனை நம்பிய ரவி தனது மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு, கீழே இறங்கி சாலையில் கிடந்த பணத்தை எடுத்துள்ளார். அப்போது ரவியின் மோட்டார் சைக்கிளில் இருந்த ரூ.5 இலட்சத்தை திருடிக் கொண்டு மர்ம நபர்கள் தப்பிச் சென்றுவிட்டனர்.

இந்தச் சம்பவம் குறித்து ரவி கொடுத்த புகாரின் பேரில் அறந்தாங்கி காவல் துணை கண்காணிப்பாளர் தட்சிணாமூர்த்தி உத்தரவின்பேரில், அறந்தாங்கி காவல் ஆய்வாளர் பாலமுருகன் தலைமையில், உதவி ஆய்வாளர் குணசேகரன், ஏட்டுக்கள் ரவி, ஆனந்தசேகர், டேவிட், சரவணன் உள்ளிட்டோர் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டு மர்மநபர்களை வலைவீசி தேடினர். 

இந்த நிலையில் ரவியை ஏமாற்றி பணத்தை திருடியவர்கள் திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் மலைக்கோவில்சோழபுரம் பகுதியில் பதுங்கியிருப்பதாக தகவல் வந்தது. இதனையடுத்து தனிப்படை காவலாளர்கள் அங்கு சென்றனர். 

பின்னர் ரவியின் பணத்தை திருடிய திருவெறும்பூர் காந்தி நகரை சேர்ந்த ராஜா என்ற குமார் (24), மலைக்கோவில் சோழபுரம் செல்வக்குமார் (32), திருவெறும்பூர் லோகேஸ் (24) ஆகிய மூவரை கைது செய்தனர். மேலும், அவர்களிடம் இருந்த ரூ.1 இலட்சத்து 20 ஆயிரம் மற்றும் இரண்டு மோட்டார் சைக்கிள்களையும் காவலாளர்கள் பறிமுதல் செய்தனர். 

அதனைத் தொடர்ந்து மூவரையும் அறந்தாங்கி காவல் நிலையத்திற்கு கொண்டுவந்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், இந்த திருட்டு சம்பவத்தில் தொடர்புடைய கிருஷ்ணன், சீனிவாசன் ஆகிய இருவரையும் வலைவீசி தேடி வருகின்றனர்.

click me!