
கடலூர்
கடலூர் மக்களுக்கு சீராக குடிநீர் விநியோகம் செய்வதற்கு ரூ.4 கோடியே 11 இலட்சத்து 87 ஆயிரம் மதிப்பில் 117 குடிநீர் திட்டப் பணிகளை செயல்படுத்திட உத்தரவிடப்பட்டுள்ளது என்று ஆட்சியர் ராஜேஷ் கூறினார்.
கடலூர் மாவட்டத்தில், ஆட்சியர் அலுவலகத்தில், மாவட்ட ஆட்சியர் ராஜேஷ் தலைமையில் ஆய்வுக் கூட்டம் ஒன்று நேற்று நடைப்பெற்றது.
மக்களுக்கு சீரான குடிநீர் விநியோகம் செய்வது தொடர்பாக இந்த ஆய்வுக்கூட்டம் நடைப்ப்பெற்றது.
இந்தக் கூட்டத்தில் ஆட்சியர் ராஜேஷ் கூறியது:
“கடலூர் மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள கடும் வறட்சியினால் நீர் மட்டம் குறைந்ததாலும், குடிநீர் விநியோக பணிகளில் ஏற்பட்டுள்ள பழுதுகளாலும், குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்ட கிராமங்கள் கண்டறியப்பட்டு, அத்தியாவசிய குடிநீர் பணிகளுக்காக கிராம ஊராட்சிகளில் ரூ.4 கோடியே 11 இலட்சத்து 87 ஆயிரம் மதிப்பில் 117 திட்டப் பணிகள் செயல்படுத்திட உத்தரவிடப்பட்டு உள்ளது.
எனவே, இந்தப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்.
வாரந்தோறும் ஊராட்சி செயலாளர்கள் மற்றும் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி இயக்குபவர்களின் ஆய்வுக் கூட்டம் மண்டல அலுவலர்கள் தலைமையில் நடத்தி 15 நாள்களுக்கு ஒரு முறை நீர்த்தேக்க தொட்டிகளை சுத்தம் செய்ய வேண்டும்” என்று அவர் கூறினார்.
இந்தக் கூட்டத்தில் திட்ட இயக்குனர் ஆனந்தராஜ், வருவாய் கோட்டாட்சியர்கள், உதவி இயக்குனர் (ஊராட்சிகள்), கடலூர், விருத்தாசலம், ஒன்றிய மண்டல அலுவலர்கள், கூட்டு குடிநீர் திட்ட அலுவலர்கள், நகராட்சி ஆணையாளர்கள் ஆகியோர் பங்கேற்றனர்.