
கடலூர்
போக்குவரத்துக் கழகங்கள் செலவு செய்த தொழிலாளர்கள் பணம் ரூ.7 ஆயிரம் கோடியை உடனே வழங்க வேண்டும் உள்ளிட்ட. கோரிக்கைகளை வலியுறுத்தி கடலூர் மண்டல அலுவலகம் முன்பு அரசு போக்குவரத்து அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு போக்குவரத்துத் தொழிற்சங்க கூட்டமைப்பினர் வருகிற 15-ஆம் தேதி வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட உள்ளனர்
இந்த நிலையில், கடலூர் மண்டல அலுவலகம் முன்பு அரசுப் போக்குவரத்து அனைத்துத் தொழிற்சங்கக் கூட்டமைப்புச் சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தொ.மு.ச. பழனிவேல் தலைமை தாங்கினார். பாட்டாளி தொழிற்சங்க தலைவர் ஜெய்சங்கர் வரவேற்றார். தொ.மு.ச. பொருளாளர் செந்தில்நாதன், சி.ஐ.டி.யூ. பொருளாளர் குணசேகரன், எல்.எல்.எப். சுந்தர் உள்பட பலர் முன்னிலை வகித்தனர்.
இதில், “அரசுப் போக்குவரத்துக் கழகத்தை பாதுகாக்க அரசு நிதி ஒதுக்க வேண்டும்.
போக்குவரத்து கழகங்களின் வரவுக்கும், செலவுக்குமான வித்தியாசத் தொகையை அரசு வழங்க வேண்டும்.
போக்குவரத்துக் கழகங்கள் செலவு செய்த தொழிலாளர்கள் பணம் ரூ.7 ஆயிரம் கோடியை உடனே வழங்க வேண்டும்” உள்ளிட்ட. கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
இந்த ஆர்ப்பாட்டத்தில் தொ.மு.ச. பொதுச் செயலாளர் தங்க. ஆனந்தன், சி.ஐ.டி.யூ. பாஸ்கரன், மறுமலர்ச்சி தொழிலாளர் சங்க பொதுச்செயலாளர் மணிமாறன், பாட்டாளி தொழிற்சங்க பொதுச்செயலாளர் வீரமணி, ஏ.எல்.எல்.எப். கருணாநிதி, தே.மு.தி.க. தொழிற்சங்க தண்டபாணி உள்பட பலர் பங்கேற்றுப் பேசினர்.
அதனைத் தொடர்ந்து அவர்கள் கோரிக்கைகளை விளக்கி கண்டன முழக்கமிட்டனர். பிறகு வேலை நிறுத்த விளக்க வாயிற்கூட்டம் நடந்தது. இதில் அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பினரும் பங்கேற்றனர்.