
திக்..திக்.. ரயில் பயணம்…திருமங்கலம் – நேரு பூங்கா இடையே சுரங்கப் பாதையில் மெட்ரோ ரயில் சேவை தொடக்கம்…
சென்னையில் திருமங்கலம் – நேரு பூங்கா இடையே சுரங்கப் பாதையில் மெட்ரோ ரயில் சேவை வரும் 14 ஆம் தேதி தொடங்குகிறது. தமிழகத்தில் முதலாவது நீண்ட தூர சுரங்க ரெயில் போக்குவரத்து இது என்பதால், சென்னை மக்களுக்கு திக்..திக்.. அனுபவம் காத்து இருக்கிறது.
சென்னையில் அதிகரித்து வரும் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தும் வகையில், வண்ணாரப்பேட்டை – விமான நிலையம், சென்டிரல் – பரங்கிமலை என 2 வழித்தடங்களில் மெட்ரோ ரெயில் போக்குவரத்து தொடங்குவதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன..
முதற்கட்டமாக, கோயம்பேடு – பரங்கிமலை, சின்னமலை – விமான நிலையம் இடையே பணிகள் முடிக்கப்பட்டு, உயர்மட்ட பாதையில் மெட்ரோ ரெயில் சேவை தற்போது நடைபெற்று வருகிறது.
மேலும், திருமங்கலம் – நேரு பூங்கா இடையே சுரங்கப்பாதையில் மெட்ரோ ரெயில் சேவையை தொடங்குவதற்கான பணிகளும் வேகமாக நடந்து வந்தன. 7.63 கிலோ மீட்டர் தொலைவு கொண்ட இந்தப் பாதையில், திருமங்கலம், அண்ணாநகர் டவர், அண்ணாநகர் கிழக்கு, ஷெனாய்நகர், பச்சையப்பன் கல்லூரி, கீழ்ப்பாக்கம், நேரு பூங்கா ஆகிய 7 ரெயில் நிலையங்கள் உள்ளன.
இதில், திருமங்கலம் – ஷெனாய்நகர் வரையே இரட்டை ரெயில் பாதை அமைக்கப்பட்டுள்ளது. ஷெனாய் நகர் – நேரு பூங்கா இடையே ஒற்றை பாதை பணியே முடிக்கப்பட்டுள்ளது. இருந்தாலும், சுரங்கப்பாதையில் மெட்ரோ ரெயில் போக்குவரத்தை தொடங்க சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் முடிவு செய்தது.
அதன் ஒரு பகுதியாக, மெட்ரோ ரெயில் பாதுகாப்பு ஆணையர் கே.ஏ.மனோகரன், தனது குழுவினருடன் அந்த வழித்தடத்தில் டிராலியில் சென்று ஆய்வு மேற்கொண்டார். ஆய்வு திருப்திகரமாக அமைந்ததால், மெட்ரோ ரெயில் போக்குவரத்தை தொடங்க அவர் அனுமதி அளித்துள்ளார்.
இதனையடுத்து வரும் 14–ஆம் தேதி திருமங்கலம் – நேரு பூங்கா இடையே சுரங்கப்பாதையில் மெட்ரோ ரெயில் போக்குவரத்து தொடங்க இருக்கிறது. அன்று பகல் 12 மணிக்கு திருமங்கலம் மெட்ரோ ரெயில் நிலையத்தில் நடைபெறும் விழாவில், மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் ‘பச்சைக் கொடி’ காட்டி சுரங்கப்பாதையில் மெட்ரோ ரெயில் போக்குவரத்தை தொடங்கிவைக்கின்றனர்.
உடனடியாக, சுரங்கப்பாதை வழித்தடத்தில் செல்லும் மெட்ரோ ரெயில்களில் பயணிகளும் செல்ல அனுமதிக்கப்பட உள்ளனர். சென்னை மக்களுக்கு இது ஒரு புதிய அனுபவமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.