
நாமக்கல்
குமாரபாளையம் நகராட்சித் தொழிலாளியை பணி நிரந்தரம் செய்வதற்காகவும், நிலுவைத் தொகையை பெறவும் ரூ.2 ஆயிரம் லஞ்சம் வாங்கிய துப்புரவு ஆய்வாளருக்கு 18 ஆண்டுகளுக்குப் பிறகு நாமக்கல் நீதிமன்றத்தில் இரண்டு ஆண்டு சிறை தண்டனையும், ரூ.2000-ம் அபராதம் விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது.
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் நகராட்சியில் துப்புரவு தொழிலாளியாக ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வந்தவர் மாது.
இவர் கடந்த 1999–ஆம் ஆண்டு தனது பணியை நிரந்தரம் செய்து கொள்ளவும், நகராட்சியில் இருந்து பெற வேண்டிய நிலுவைச் சம்பளத்தை பெறவும் நகராட்சி துப்புரவு ஆய்வாளர் முருகனிடம் சென்றுள்ளார்.
அதற்கு முருகன் பணி நிரந்தரம் செய்ய, நிலுவைத் தொகைப் பெற ரூ.2 ஆயிரம் கையூட்டுக் கேட்டுள்ளார்.
இதைக் கேட்ட மாது தருவதாக ஒப்புக்கொண்டு இந்த விவரம் குறித்து நாமக்கல் லஞ்ச ஒழிப்பு காவலாளர்களுக்குத் தெரிவித்தார்.
அதனையடுத்து லஞ்சம் ஒழிப்பு காவலாளர்கள் தெரிவித்ததின்பேரில் ரசாயனம் தடவிய ஆயிரம் ரூபாய் நோட்டுகள் இரண்டை முருகனிடம் கொடுத்தார். அந்த தொகையை வாங்கும்போது, முருகன் லஞ்ச ஒழிப்பு காவலாளர்களிடம் கையும் களவுமாக பிடிபட்டார்.
அதைத் தொடர்ந்து முருகன் மீது நாமக்கல் மாவட்ட முதன்மை குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு விசாரணை நடந்து வந்தது.
இந்த வழக்கில் விசாரணை முடிவடைந்ததைத் தொடர்ந்து நேற்று தீர்ப்பு வெளியானது.
அந்த தீர்ப்பில், “முருகனுக்கு இரண்டு ஆண்டு சிறை தண்டனையும், ரூ.2 ஆயிரம் அபராதமும் விதிக்கிறேன்” என்று நாமக்கல் மாவட்ட முதன்மை குற்றவியல் நீதிபதி கருணாநிதி, தீர்ப்பு வழங்கினார்.