
இயக்குநரும், நடிகருமான டி.ராஜேந்தரின் தியேட்டருக்கு, ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. டெங்கு கொசுக்களை உற்பத்தி செய்யும் வகையில் தியேட்டரில் தண்ணீர் தேங்கி இருந்ததால், வேலூர் மாவட்ட வருவாய் ஆய்வாளர் அபராதம்.
தமிழகத்தில் டெங்கு மற்றும் வைரஸ் காய்ச்சல்கள் வெகு வேகமாக பரவி வருகிறது. இதன் காரணமாக, ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் காய்ச்சலுக்கு ஆளாகி உள்ளனர்.
டெங்குவை கட்டுப்படுத்துவது தொடர்பாக அரசு பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. ஆனாலும், டெங்குவால் உயிரிழப்போரின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது.
டெங்கு பாதித்தோருக்கு சிகிச்சை அளித்து வந்தாலும், சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை நாள்தோறும் தொடர்ந்து வருகிறது. இதன் காரணமாக மக்கள் பெரும் பீதியில் உள்ளனர்.
டெங்கு கொசுக்களை கட்டுப்படுத்தும் நோக்கில், வீடுகள், தனியார்-அரசு அலுவலகங்கள், திரையரங்குகள், பள்ளிகள் என பல்வேறு இடங்களில் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.
ஒவ்வொரு வீடுகளுக்கு சென்று அரசு அதிகாரிகள் ஆய்வு நடத்தி வருகின்றனர். பொறுப்பற்ற நிலையில் தண்ணீர் தேங்குவதை கவனிக்காது அலட்சியமாக உள்ளவர்களிடம் அரசு அபராதம் விதித்து வருகிறது.
இந்த நிலையில், திரைப்பட இயக்குநர் டி. ராஜேந்தரின் தியேட்டருக்கு, அதிகாரிகள் 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்துள்ளனர். வேலூர் மாவட்டம், கொணவட்டத்தில் நடிகர் டி.ராஜேந்தருக்கு சொன்தமான தியேட்டர் ஒன்று உள்ளது.
இந்த தியேட்டரில், டெங்கு ஆய்வு செய்யப்பட்டது. அப்போது, கொசு உற்பத்தி செய்யப்படும் வகையில், தண்ணீர் தேங்கி இருந்ததை மாவட்ட வருவாய் ஆய்வாளர் கண்டுபிடித்தார். இதனை அடுத்து, டி.ராஜேந்தரின் திரையரங்குக்கு ரூ.10 ஆயிரம் அபராத தொகையை மாவட்ட வருவாய் ஆய்வாளர் விதித்தார்.
இதேபோல், ஆம்பரில், டெங்கு கொசு உற்பத்தி செய்யப்படும் வகையில் இருந்த சாய் சக்தி தியேட்டருக்கு நகராட்சி ஆணையர், ரூ.50 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தார்.