
திருநெல்வேலி
திருநெல்வேலியில் செருப்பு கடை ஒன்றில் பூட்டை உடைத்து ரூ.10 இலட்சத்தை கொள்ளையடித்த மர்மநபர்களை காவலாளர்கள் தனிப்படை அமைத்து தீவிரமாக தேடி வருகின்றனர்.
திருநெல்வேலி சந்திப்பு பெருமாள்சன்னதி தெருவைச் சேர்ந்தவர் தக்காராம் (47). இவருடைய சொந்த ஊர் ராஜஸ்தான் மாநிலம். இவர் நெல்லையில் குடும்பத்தோடு வசித்து வருகிறார்.
நெல்லை சந்திப்பு மேம்பாலம் அருகில் மொத்த செருப்பு கடையும், ஏஜென்சியும் நடத்தி வருகிறார். இவர் நேற்று முன்தினம் இரவு 10.30 மணிக்கு வழக்கம்போல கடையை பூட்டிவிட்டு வீட்டுக்குச் சென்றுள்ளார்.
நேற்று காலை 8 மணி அளவில் கடைக்கு வந்தபோது கடையின் பூட்டுகள் உடைக்கப்பட்டு கிடந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்த தக்காராம், கடையின் உள்ளே சென்று பார்த்தார்.
அங்கு இருந்த பீரோ, மேஜை ஆகியன உடைக்கப்பட்டும், கடையில் இருந்த பொருட்கள் ஆங்காங்கே சிதறியும் கிடந்தன. மேஜை டிராயரில் இருந்த ரூ.10 இலட்சம், வங்கி காசோலை, பில்புக் போன்றவையும் காணாமல் போயிருந்தது.
இதுகுறித்து நெல்லை சந்திப்பு காவல் நிலையத்தில் தக்காராம் புகார் கொடுத்தார். ஆய்வாளர் ஜெயசீலன் மற்றும் காவலாளர்கள் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.
கைரேகை நிபுணர்களும், தடயவியல் நிபுணர்களும் வந்து தடயங்களை சேகரித்தனர். மேலும் இந்த கொள்ளை தொடர்பாக நெல்லை சந்திப்பு குற்றப்பிரிவு காவலாளர்கள் வழக்குபதிவு செய்தனர்.
கொள்ளை போன ரூ.10 இலட்சத்துக்கான கணக்கு விவரங்களை தக்காராமிடம் கேட்டு காவலாளார்கள் விசாரணை நடத்தினர்.
நள்ளிரவில் மர்மநபர்கள் செருப்பு கடையின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்துள்ளனர். அங்கிருந்த ரூ.10 இலட்சத்தை கொள்ளையடித்துச் சென்றது விசாரணையில் தெரிய வந்துள்ளது.
நெல்லை சந்திப்பு பகுதிகளில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளையும் வைத்து காவலாளர்கள் விசாரித்து வருகின்றனர்.
கொள்ளையர்களை பிடிக்க நெல்லை மாநகர துணை காவல் ஆணையர் பெரோஸ்கான் அப்துல்லா உத்தரவின் பேரில் ஆய்வாளர் ஜெயசீலன், உதவி ஆய்வாளர் மகேஷ் ஆகியோர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.