
சென்னை வியாசர்பாடியில் ரவுடி பழனி என்பவர் வெட்டிகொல்லப்பட்ட நிகழவை ஒட்டி நடந்த கலவரத்தில் பால்முகவர் சங்க தலைவரின் வேன் கண்ணாடி உடைக்கப்பட்டது.
சென்னை வியாசர்பாடி , பக்தவச்சலம் காலனியில் வசித்தவர் பழனி. இவர் நேற்றிரவு 6 பேர் கொண்ட கும்பலால் வெட்டி கொலை செய்யப்பட்டார். இவர் கொலை செய்யப்பட்ட தகவல் கிடைத்தவுடன் பழனி வசித்த பக்தவச்சலம் காலனியில் அவரது ஆதரவாளர்கள் சுமார் 20 க்கும் மேற்பட்டவர்கள் கும்பலாக கூடி தகராறில் ஈடுபட்டனர். இதில் தமிழ்நாடு பால் முகவார் சங்க தலைவர் எஸ்.ஏ.பொன்னுசாமியின் மாருதிவேன் கண்ணாடி உடைக்கப்பட்டது. இது பற்றி எஸ்.ஏ.பொன்னுசாமி கூறுகையில் ,
திமுக பிரமுகர் மறைந்த இடிமுரசு இளங்கோவன் அவர்களின் அண்ணன் மகன் பழனி வியாசர்பாடி ஜீவா ரயில் நிலையம் அருகே நேற்று இரவு வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார்.
மறைந்த திமுக பிரமுகர் இடிமுரசு இளங்கோவன் அவர்களுடைய அண்ணன் அவர்களின் வீடு சென்னை, வியாசர்பாடி, பக்தவச்சலம் காலனியில் 1வது தெருவில் உள்ளது. அவரது வீட்டிற்கு எதிரே பீலிக்கான் முனீஸ்வரன் கோவிலின் பிரதான வாயில் உள்ளது.
அதன் அருகே உள்ள மரத்தின் அடியில் எனது மாருதி ஆம்னி காரை நிறுத்தி வைப்பது வழக்கம். நேற்றும் அப்படி தான் நிறுத்தி வைத்திருந்தேன். வழக்கமாக இரவு பத்து மணிக்கு காரை எடுத்து அருகில் இருக்கும் எங்களது கடைக்கு முன்புறம் நிறுத்துவேன்.
நேற்று பொதுமக்கள் தீபாவளி பட்டாசுகள் வெடித்து கொண்டிருந்ததால் சற்று தாமதமாக காரை எடுக்க சென்ற போது அந்த தெருவில் மக்கள் கூட்டம் கூட்டமாக நின்று கொண்டிருந்தனர். என்ன விசயம் என கேட்ட போது எவரும் பேசவே தயங்கினர்.
சரி நமது காரை எடுத்து கடைக்கு முன்புறம் நிறுத்துவோம் என காருக்கு அருகில் சென்றால் அதிர்ச்சி. காரின் முன்புற கண்ணாடி அடித்து உடைக்கப்பட்டிருந்தது. அங்கு கூடியிருந்த வேறு ஒருவரிடம் கேட்ட போது இடிமுரசு இளங்கோவன் அவர்களின் அண்ணன் மகன் பழனி வெட்டப்பட்டதாகவும், அச்செய்தியை கேள்விப்பட்டு 20பேர் கும்பல் இவ்வழியாக ஓடியதாகவும் தெரிவித்தனர்.
அதற்கு மேல் கார் அங்கு நின்றால் ஆபத்து என எனது காரை ஓட்டி வந்து எங்களது கடைக்கு அருகே நிறுத்தினேன். அந்த இடத்தில் எனது காருடன் சேர்த்து சுமார் 10க்கும் மேற்பட்ட கார், வேன், ஆட்டோக்கள் நிற்கும் போது எனது காரை மட்டும் அடித்து உடைக்க வேண்டிய அவசியம் என்ன என தெரியவில்லை? இவ்வாறு அவர் தெரிவித்தார்.