அரிவாளால் தலையில் ஒரே போடு போட்டு ரௌடி கொலை; போலீஸ் பேச்சை கேட்காததால் அசம்பாவிதம்...

First Published Jun 19, 2018, 11:41 AM IST
Highlights
Rowdy killed with sickle attack on head do not listen Police warning...


திண்டுக்கல்
 
திண்டுக்கல்லில், மர்ம கும்பல் ரௌடியை துரத்திச் சென்று அரிவாளால் தலையில் ஒரே போடு போட்டு கொடூரமாக கொன்றது. முன்கூட்டியே போலீஸ் எச்சரித்தும் உதாசினப்படுத்தியதால் அந்த ரௌடி கொல்லப்பட்டுள்ளார்.

திண்டுக்கல் மாவட்டம், குடைப்பாறைப் பட்டியைச் சேர்ந்த மருதை என்பவரின் மகன் குமரேசன் (28). இவருடைய மனைவி மனிஷா. இவர்களுக்கு அக்‌ஷயா என்ற பெண் குழந்தை உள்ளது. 

குமரேசன், திண்டுக்கல் ஆர்.வி. நகரில் உள்ள ஒரு இறைச்சிக் கடையில் வேலை செய்து வந்தார். இவர் குடைப்பாறைப் பட்டியில் இருந்து ஆர்.வி.நகரில் உள்ள இறைச்சிக் கடைக்கு நாள்தோறும் தன்னுடைய மோட்டார் சைக்கிளில் வேலைக்கு செல்வார். 

வழக்கம்போல நேற்றும் இறைச்சிக் கடைக்கு தனது மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டு இருந்தார். அப்போது ஆர்.வி.நகர் பகுதியில் ஒரு டீ கடை அருகே மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு நண்பர்களுடன் பேசிக்கொண்டிருந்தார். 

அப்போது, அந்தப் பகுதியில் பதுங்கியிருந்த நான்கு பேர் கத்தி மற்றும் அரிவாள் போன்ற ஆயுதங்களுடன் திடீரென குமரேசனை வெட்டுவதற்காக துரத்தினர்.  சுதாரித்துக் கொண்ட குமரேசன் தப்பி ஓட முயன்றார். ஆனால், அவரை சுற்றி வளைத்த அந்த கும்பல் திண்டுக்கல் தெற்கு காவல் நிலையம் அருகே உள்ள காளியம்மன் கோயில் பகுதியில் குமரேசனின் முகத்தில் மிளகாய் பொடியை தூவி அரிவாள் தலையில் பயங்கரமாக வெட்டியது. 

இதனால் இரத்த வெள்ளத்தில் சுருண்டு விழுந்த குமரேசன் துடிதுடித்து நிகழ்விடத்திலேயே இறந்தார். இதனையடுத்து அந்த கும்பல் அங்கிருந்து மாயமானார்கள்.  கொலை நடந்ததை பார்த்த பொதுமக்கள் அலறி அடித்துக்கொண்டு ஓட்டம் பிடித்தனர். 

இதுகுறித்து தகவலறிந்த குமரேசனின் உறவினர்கள் ஓடிவந்து அவருடைய உடலை பார்த்து கதறி அழுதனர்.  பின்னர், சம்பவ இடத்திற்கு வந்த திண்டுக்கல் தெற்கு காவலாளர்கள் விரைந்து சென்று குமரேசனின் உடலை கைப்பற்றி, உடற்கூராய்வுக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.  இதுகுறித்து வழக்குப்பதிந்து தப்பிச்சென்ற மர்ம நபர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.

இதுகுறித்து காவலாளர்கள் தரப்பில் கூறப்பட்டது: 

"குடைப்பாறைப் பட்டியைச் சேர்ந்த திருப்பூர் பாண்டி என்பவரும், கொலைச் செய்யப்பட்ட குமரேசனும் இரு பிரிவாக செயல்பட்டு வந்துள்ளனர். 

இவ்விரு ரௌடி கும்பலுக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் பாண்டி தரப்பை சேர்ந்தவர்கள், குமரேசன் தரப்பை சேர்ந்த ஒருவரை கொலை செய்தனர். இதனையடுத்து குமரேசன் தரப்பினர் கடந்த 2015–ஆம் ஆண்டு, பாண்டி தரப்பைச் சேர்ந்த ஒருவரை கொலை செய்துள்ளனர். 

இதுகுறித்து குமரேசன் மீது திண்டுக்கல் தெற்கு காவல் நிலையத்தில் வழக்கு உள்ளது. இதனால் பழிக்குப்பழியாக இந்த கொலை நடந்திருக்கலாம் என்றனர். 

மேலும், குமரேசன் மீது எதிரணியினருக்கு முன்விரோதம் இருப்பதால் அவரை கொலை செய்ய திட்டம் தீட்டப்படுவதாக காவலாளர்களுக்கு இரகசிய தகவல் கிடைத்தது. இதுகுறித்து குமரேசனை அழைத்து எச்சரித்தோம். ஆனால், காவலாளர்களின் எச்சரிக்கையை பொருட்படுத்தாமல் இருந்ததால் குமரேசன் கொலை செய்யப்பட்டுள்ளார்" என்று தெரிவிக்கப்பட்டது.

click me!