
ஈரோடு
ஊட்டியில் இருந்து ஈரோடு நோக்கி வந்துக் கொண்டிருந்த அரசு பேருந்தின் மேற்கூரை தார்பாய் அடித்துச் சென்றது. நல்ல வேளையாக சாலையில் எந்த வாகனமும் வராததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.
ஊட்டியில் இருந்து நேற்று முன்தினம் அரசு பேருந்து ஒன்று புறப்பட்டு ஈரோடு மாவட்டம் நோக்கி வந்துக் கொண்டிருந்தது.
இந்த பேருந்து பெருந்துறை அருகே உள்ள சரளை என்ற இடத்தில் வந்துக் கொண்டிருந்தது. அப்போது மழைநீர் உள்ளே இறங்காமல் இருப்பதற்காக பேருந்தின் மேற்கூரையில் பதித்திருந்த தார்பாய் திடீரென பெயர்த்துக் கொண்டது. பின், அந்த தார்பாய் காற்றில் வேகமாக அடித்து கொண்டு பறந்து போய் சாலையில் விழுந்தது.
அப்போது, அந்தப் பகுதியில் தி.மு.க. மண்டல மாநாட்டுப் பணியில் ஈடுபட்டிருந்தவர்கள் இதனைக் கண்டனர். அவர்கள், உடனே சத்தம் போட்டு பேருந்தை நிறுத்தினர். அதன்பின்னர் ஓட்டுநரிடம் இதுகுறித்து தெரிவித்தனர்.
அதனைத் தொடர்ந்து ஓட்டுநர், நடத்துநர் பயணிகளின் உதவியுடன் சாலையில் விழுந்த தார்பாயை எடுத்து பேருந்தின் மேற்பகுதியில் சுருட்டி வைத்தார்.
இந்தச் சம்பவத்தின்போது அந்த வழியாக வாகனங்கள் எதுவும் வராததால் விபத்து தவிர்க்கப்பட்டது. நம்ம ஊரு பேருந்தின் நிலைமை நமக்கு ஏற்கனவே நன்றாக தெரிந்ததுதான். பேருந்தின் உள்ளே ஓட்டை, இறுக்கைகளின் நிலைமை, வண்டியின் சத்தம், கரும்புகை என்று அனைத்துமே பழுதுதான். அதனை ஓட்டும் ஓட்டுநர்களின் சாமர்த்தியத்தை பொறுத்து அந்த பேருந்து சொகுசுப் பயணமாகவோ, எமலோக பயணமாகவோ மாறும்.
உதாரணத்திற்கு, அரசு பேருந்து ஓட்டுநர்கள் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தபோது தற்காலிக பேருந்து ஓட்டுநர்களை நியமித்ததால் நடந்த விபத்துகள் மற்றும் உயிரிழப்புகள்.
புது புதிதாக பேருந்தும் விடும் தமிழக அரசு அப்படியே பழைய பேருந்துகளையும் கொஞ்சம் சர்வீச் செய்தால் நன்றாக இருக்கும். நூற்றுக் கணக்கில் கொடுத்து சொகுசா செல்லும் ஏசி பேருந்துகள் மட்டும் நல்லா இருக்கும்போது, எளிய மக்கள் பயணிக்கும் பேருந்துகளுக்கு மட்டும் ஏன் இந்த நிலைமை? இரண்டு வகை பேருந்தையும் ஒரே நிறுவனம் தானே இயக்குகிறது. இதில் கூட பாகுபாடா? அட போங்கப்பா!