
சென்னையில் அடுக்குமாடி குடியிருப்பு பகுதியில் ராக்கெட் லாஞ்சர் ஒன்று கிடந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.அதை கைப்பற்றி போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
சென்னை அயனாவரம் குன்னூர் நெடுஞ்சாலையில் சன்னி வாலே என்ற பெயரில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்று உள்ளது.
இந்த குடியிருப்பில் நூற்றுகணக்கான குடியிருப்புகள் உள்ளனர். இந்த குடியிருப்பின் பின்புறம் பெரிய பூங்கா உள்ளது.
இன்று காலை இந்த பூங்காவில் சில சிறுவர்கள் விளையாடி கொண்டிருந்தனர்.
அப்போது அங்கிருந்த புதர் ஒன்றில் மறைவில் ராக்கெட் லாஞ்சர் வெடிகுண்டு ஒன்று இருப்பதை பார்த்த சிறுவர்கள் அதை விளையாட்டு பொருள் என்று நினைத்து வைத்து விளையாடி கொண்டிருந்தனர்.
அப்போது அந்த வழியாக வந்த அடுக்குமாடி குடியிருப்பின் காவலாளி சிறுவர்கள் கையில் எதையோ வைத்து விளையாடி கொண்டிருப்பதை பார்த்து அவர்களை அருகில் அழைத்து அந்த பொருளை வாங்கி பார்த்துள்ளார்.
அதை பார்த்தவுடன் அந்த காவலாளிக்கு தூக்கி வாரி போட்டுள்ளது. அது ராக்கெட் லான்சர் வகை வெடிகுண்டு போன்று இருந்ததை பார்த்து அதிர்ந்து போன அந்த காவலாளி உடனடியாக குடியிருப்பு சங்க நிர்வாகிகளை அழைத்து அதை காண்பித்துள்ளார்.
இதை பார்த்த குடியிருப்பு சங்க நிர்வாகிகள் அந்த மர்ம பொருளை அயனாவரம் போலீசில் ஒப்படைத்துள்ளனர்.
போலீசார் அதை ஆய்வு செய்த போது அது ராணுவத்தில் பயன்படுத்தப்படும் ஒரு வகையான வெடிகுண்டு என தெரிய வந்தது.
தேடுதல் வேட்டையின் போது எதிரிகளை அவர்கள் மறைந்திருக்கும் இடத்தை அறிந்து கொள்ள இந்த குண்டை வெடிக்க செய்வார்கள்.
வெடித்தவுடன் பிரகாசமான வெளிச்சம் உண்டாகும்.அதை வைத்து எதிரிகள் மறைந்திருக்கும் இடத்தை அறிந்து கொள்ளலாம்.
இத்தகைய ராணுவத்தில் பயன்படுத்தப்படும் ஆயுதம் எப்படி குடியிருப்பு பகுதியில் வந்தது என்று போலீசார் விசாரித்து வருகின்றனர்.
குண்டு கண்டெடுக்கப்பட்ட குடியிருப்பில் சில ஓய்வு பெற்ற ராணுவத்தினரும் வசித்து வருவதாக கூறப்படுகிறது.
அவர்களும் இதை ராணுவத்திலிருந்து எடுத்து வந்து இது தேவையில்லை என்று தூக்கி வீசியிருக்கலாமோ என்ற கோணத்தில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
சிறுவர்கள் அதை எடுத்து விளையாடும்போது வெடித்திருந்தால் உயிர் பலி ஏற்பட்டிருக்க வாய்ப்பு உண்டு.
காமெடி இன்ஸ்பெக்டர்
வெடிகுண்டை குடியிருப்பு நிர்வாகிகள் ஒப்படைத்த போது அதை வாங்கிய அயனாவரம் காவல் நிலைய ஆய்வாளர் அதன் தன்மையை பற்றி அறியமாலேயே வெடிகுண்டு நிபுணர்களையோ மீடியாக்களுக்கு தெரியகூடாது என்பதற்காக தன்னுடைய அலுவலக பீரோவில் பூட்டி வைத்த காமெடியும் நடந்தது.
ஒரு வேளை அது சக்தி வாய்ந்த வெடிகுண்டாக இருந்து வெடித்து உயிர்பலி ஆகியிருந்தால் என்னவாகியிருக்கும்??
வெடிகுண்டின் தன்மையை அறியாதவரா அந்த ஆய்வாளர் என்று சுற்றியிருந்தவர்கள் புலம்பினார்கள்.