கஜா புயலுடன் மோதும் பாகுபலி ராக்கெட்… பரபரப்பு தகவல்கள்!

By vinoth kumarFirst Published Nov 13, 2018, 1:28 PM IST
Highlights

இஸ்ரோ தயாரித்த ஜி.எஸ்.எல்.வி. மார்க்-3 மட்டும் அதிக எடை கொண்ட ராக்கெட். இதனால் அதற்கு பாகுபலி ராக்கெட் என புனைப் பெயர் வந்துள்ளது. இதையடுத்து வாட்ஸ்அப், பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் கஜா உடன் மோதும் பாகுபலி என நெட்டிசன்கள் பரப்பி வருகின்றனர்.

தொலைத் தொடர்பு, தொலையுணர்வு வழிகாட்டுதல் செயற்கைக் கோள்களை பி.எஸ்.எல்.வி., ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட்கள் மூலம் இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் விண்ணில் நிலைநிறுத்தி வருகிறது. ஆனாலும், அதிக எடை கொண்ட செயற்கைக் கோள்களை விண்ணில் ஏவ மற்ற நாடுகளின் உதவியை இஸ்ரோ நாட வேண்டிய நிலை உள்ளது. அதை மாற்றி அமைக்கும் விதமாக நமது விஞ்ஞானிகளின் நீண்ட கால உழைப்பில் ஜி.எஸ்.எல்.வி. மார்க் 3 ராக்கெட் தயாரிக்கப்பட்டுள்ளது. 

இந்த புதிய ராக்கெட் 6.4 ஆயிரம் கிலோ எடை கொண்டது. இதன்மூலம் அதிகபட்சம் 4 ஆயிரம் கிலோ எடை உடைய செயற்கைக் கோள்களையும், விண்ணில் செலுத்த முடியும். பல கட்ட சோதனைக்கு பின், கடந்த ஆண்டு ஜூன் 5-ந்தேதி ஜி.எஸ்.எல்.வி. மார்க் 3 ராக்கெட் மூலம் ஜிசாட் 19 செயற்கைக்கோள் விண்ணில் வெற்றிகரமாக  செலுத்தினர்.

இதைதொடர்ந்து, அடுத்த கட்டமாக அதிநவீன ஜிசாட் 29 தொலைத்தொடர்பு செயற்கைக் கோள் மார்க்-3 ராக்கெட் மூலம் ஆந்திரா மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஏவு தளத்தில் இருந்து நாளை மாலை 5.08 மணிக்கு விண்ணில் ஏவப்பட உள்ளது. இந்நிலையில், இஸ்ரோ தலைவர் சிவன், திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு சென்று தரிசனம் செய்தார். பின்னர் அவர் தரிசனம் முடிந்து வெளியே வந்த பின்னர், செய்தியளாளர்களுக்கு அளித்த பேட்டி. 

கஜா புயல் திசை மாறினால் மார்க்-3 ராக்கெட் விண்ணில் ஏவுவது நிறுத்தப்படும். புயல் திசை மாறாவிட்டால் திட்டமிட்டப்படி நாளை ராக்கெட் விண்ணில் ஏவப்படும். மத்திய அரசின் டிஜிட்டல் இந்தியா திட்டத்துக்கு வலுசேர்க்கும் விதமாக மலை மற்றும் அடர்ந்த வனப்பகுதிகளில் தொலைத்தொடர்பு வசதிகளை மேம்படுத்துவதே இதன் முக்கிய பணியாகும். 

அந்த வகையில் ஜம்மு காஷ்மீர் மற்றும் வடகிழக்கு மாநிலப் பகுதிகள் மிகவும் பயன்பெறும். இதில் அதிக திறன் கொண்ட கா, க்யூ பேண்ட் டிரான்ஸ்பாண்டர்கள், துல்லியமாக படம் எடுக்கும் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. மேலும், எதிர்கால தேவையை கருத்தில் கொண்டு பரிசோதனை முயற்சியில் க்யூ, வி பேண்ட் டிரான்ஸ்பாண்டர்களும் இடம் பெற்றுள்ளன. அடுத்ததாக சந்திராயன்-2 மனிதர்கள் பயணம் செய்யக்கூடிய ககன்யாங்க் ஆகிய ராக்கெட்டுகள் தயாரிக்கும் பணி நடந்துவருகிறது. இவ்வாறு அவர் கூறினார். 

மார்க்-3 ராக்கெட் 3 ஆயிரத்து 423 கிலோ எடை கொண்டது. இதன் ஆயுட்காலம் 10 ஆண்டுகள். இஸ்ரோ தயாரித்த ஜி.எஸ்.எல்.வி. மார்க்-3 மட்டும் அதிக எடை கொண்ட ராக்கெட். இதனால் அதற்கு பாகுபலி ராக்கெட் என புனைப் பெயர் வந்துள்ளது. இதையடுத்து வாட்ஸ்அப், பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் கஜா உடன் மோதும் பாகுபலி என நெட்டிசன்கள் பரப்பி வருகின்றனர்.

click me!