
வங்கிக்கு பணம் மாற்ற சென்ற கேஷியரை, கத்திமுனையில் மிரட்டி, மர்ம கும்பல், ரூ.25 லட்சத்தை பறித்து சென்றது.
சென்னை அடையாறு சாஸ்திரி நகர் பகுதியில் மைசூர் ஸ்டேட்வங்கி கிளை உள்ளது. இங்கு கேஷியராக வேலை பார்ப்பவர் இளங்கோ (44). நேற்று இரவு இளங்கோ, ரூ.25 லட்சம் மதிப்புள்ள 1000 ரூபாய் நோட்டுகளை, நங்கநல்லூர் ஆக்ஸீஸ் வங்கி கிளையில் மாற்றுவதற்காக காரில் புறப்பட்டார். அவருடன், ஆக்டிங் டிரைவர் சக்திவேல் (44) காரை ஓட்டி சென்றார்.
கார் பல்லாவரம் அருகே சென்று கொண்டிருந்தபோது, பின்னால் வேகமாக வந்த 2 பைக், காரை முந்தி சென்று வழிமறித்தது. அதில் இருந்து இறங்கிய 4 பேர், கார் அருகே வந்தனர். அவர்களிடம் இளங்கோவன் ஏன் காரை மறித்தீர்கள் என கேட்டு கொண்டு இருக்கும்போது, திடீரென மறைத்து வைத்திருந்த கத்தியை காட்டி மிரட்டி அவரிடம் இருந்த, ரூ.25 லட்சத்தை பறித்து சென்றனர்.
இதனால், திகைத்துபோன அவரும், டிரைவர் சக்திவேலும், காரில் இருந்து இறங்கி விரட்டி சென்றனர். ஆனால், பைக்கில் வந்த 4 பேர், மின்னல் வேகத்தில் தப்பி சென்று மறைந்தனர்.
இதையடுத்து இளங்கோவன், மீண்டும் சாஸ்திரி நகர் கிளை அலுவலகத்துக்கு சென்றார். அங்கு மேலாளர் லோகேஷ்ராவிடம், நடந்த சம்பவத்தை கூறினார். உடனே மேலாளர் லோகேஷ்ராவ், இளங்கோவன், டிரைவர் சக்திவேல் ஆகியோர் சாஸ்திரி நகர் போலீசில் புகார் செய்தனர்.
இதைதொடர்ந்து போலீசார், அவர்களை அழைத்து கொண்டு சம்பவம் நடந்த பகுதிக்கு சென்றனர். ஆனால், அந்த பகுதி பல்லாவரம் காவல் எல்லைக்கு உட்பட்டது என தெரிந்தது. பின்னர் இந்த வழக்கு பல்லாவரம் போலீசாருக்கு மாற்றப்பட்டது.
மக்கள் அதிகம் கூடும் பகுதியில், அதிக வாகனங்கள் செல்லும் சாலையில், வங்கி மர்மநபர்கள், பைக்கில் வந்து பணம் பறித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.